பிரபலமான இடுகைகள்

வியாழன், 5 மே, 2011

வேப்பிலை... கறிவேப்பிலை... அறிவுசார் சொத்துரிமை

தனி மனிதன் மற்றும் குடும்பச் சொத்து சார்ந்த உரிமைக்கான வழக்குகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகின்றன. நாடுகளின் எல்லைகளில் அத்து மீறல்கள், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலம் வழியாக ஓடிவரும் நீருக்கான உரிமை, ஒரு நிறுவனத்தின் அடையாளச் சின்னத்தை மற்றொருவர் பயன்படுத்திப் பொருளீட்டல் போன்ற நிகழ்வுகள் உலகளாவிய வகையில் சர்வசாதாரணமாகிக் கொண்டு வருகின்றன.
பொன்னையும், பொருளையும் போல அறிவும் மதி நுட்பமும் சொத்துகளே. அறிவுசார் சொத்து என்பது தனி மனிதனின் மூளையைப் பயன்படுத்திச் செய்யப்படும் சொந்தக் கண்டுபிடிப்பாகும். இது புதிய, புதுமையான, பிறருக்குப் பயன்படுகிற படைப்பாகும். அறிவுசார் சொத்திற்கான உரிமை என்பது, காப்புரிமை மற்றும் பதிப்புரிமை என இருவகைப்படும். காப்புரிமை, பெரும்பாலும் தொழில் சம்பந்தப்பட்டதாகும். பதிப்புரிமை, எழுத்து சம்பந்தப்பட்டதாகும். அறிவுசார் சொத்துரிமையை ஒருவரின் அனுமதியின்றிப் பிறர் பயன்படுத்துவது குற்றமாகும்.
இந்த வேகமான உலகில் நாளுக்கு நாள் தொழில் நுட்ப வளர்ச்சியும், இணையத் தளங்களும் அதிகரிக்க, அறிவுசார் சொத்துரிமைகளுக்கான தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
தற்சமயம் இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை பற்றிய விவாதம் எழக் காரணம் மஞ்சள், வேப்பிலை, பாசுமதி அரிசி ஆகியவற்றின் அறிவுசார் சொத்துரிமையை அயல் நாட்டினர் பெற்றதும், பெற முயற்சிப்பதுமே ஆகும். டெக்ஸாசில் உள்ள ரைஸ்டெக் என்ற நிறுவனம், இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து பாசுமதி அரிசி மாதிரிகளைச் சேகரித்து விஞ்ஞான முறையில் டெக்ஸாமதி என்ற புதிய அரிசி ரகத்தை உருவாக்கி அதனை விற்பதற்காகக் காப்புரிமை பெற்றது. பாசுமதியைப் போன்ற மணமும், குணமும் உள்ள இந்த அரிசியை மட்டுமே வாங்க வேண்டுமென ஒருவேளை உலக நாடுகள் நினைத்துவிட்டால், உண்மையான பாரம்பரிய பாசுமதி அரிசியை விளைவிக்கும் இந்தியாவும் பாகிஸ்தானும் உலகச் சந்தையில் எவ்வளவு பாதிக்கப்படும்?
தென் ஆப்பிரிக்க நாடுகளில் எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட பாரம்பரிய மருந்துகளைப் பயன்படுத்துவது, அறிவுசார் சொத்துரிமை விதிகள் மூலம் தடை செய்யப்பட்டு, மேல் நாட்டு மருந்துகளையே பயன்படுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டதாக சில நாள்களுக்கு முன்னர் செய்தி வந்தது. பழங்குடி மக்கள் தங்கள் காடுகளிலும், மேடுகளிலும் உள்ள பாரம்பரிய மருத்துவ மூலிகைகள் மற்றும் மருத்துவ அறிவினைப் பயன்படுத்தி இந்நோய்க்கு நிவாரணம் தேடிக்கொள்ளும் சூழ்நிலையில், இதே மூலிகைகளைப் பயன்படுத்தி வேற்று நாட்டினர் அறிவுசார் சொத்துரிமை பெற்றிருந்தால், இந்த மூலிகைக்கு பழங்குடியினர் சொந்தம் கொண்டாட இயலாது. காலங்காலமாக இலவசமாகப் பயன்படுத்தி வந்த இவற்றை, அவர்கள் விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் நேரிடும். பிற நாடுகளின் வணிக நோக்கத்திற்காக, தங்களது பாரம்பரிய அறிவினைப் பயன்படுத்தாமல் எய்ட்ஸால் அவர்கள் சாக வேண்டுமா என்ற அதிர்ச்சியான கேள்வி நம்முள் எழுகிறது.
இந்தியா பல்லுயிர்ப் பெருக்க வளமுடைய நாடு. உலகின் அபரிதமான பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த 12 நாடுகளில் நமது நாடும் ஒன்று. இந்தியக் காடுகளில் கொட்டிக் கிடக்கும் மூலிகைச் செல்வத்தைப் பன்னாட்டு விதிகளின்படி பதிவு செய்கையில் அது உயிரியல் திருட்டுக்கு மேலும் வழி வகுத்து விடக்கூடும் என நிபுணர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அஞ்சுகின்றனர்.
1992-ல் இயற்றப்பட்ட பல்லுயிர்ப் பெருக்கம் சம்பந்தப்பட்ட பன்னாட்டு ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையொப்பமிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவிலும் இது குறித்தான வரைவுச் சட்டம் தயாராகியுள்ளது. மரபுசார் இயற்கைச் செல்வங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றிலிருந்து ஏற்படும் நன்மைகளை உலகளாவிய வகையில் பகிர்ந்து கொள்ளலுமே, இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களாகும். நன்மைகளைப் பகிர்ந்து கொள்ளல் என்ற நிலை வந்து விட்ட பிறகு, பாரம்பரிய மருத்துவ அறிவினை இந்தியாவால் காக்க முடியுமா?
மரபணுசார் சொத்துகள், பாரம்பரிய அறிவு மற்றும் நாட்டுப்புறக் கலைகள் ஆகியவற்றின் செழுமையைத் தன்னுள் கொண்டுள்ள இந்தியாவின் பல்லுயிர்ப் பெருக்க வளம் காக்கப்படுமா? அல்லது பன்னாட்டு ஒப்பந்தங்களிலும் சட்டங்களிலும் உள்ள ஓட்டைகள் மூலம் நமது வளம் சுரண்டப்படுமா? நம் இந்தியாவில் மறுப்பு வாதங்களுக்கு இடமளித்து அதன் பின்னரே, ஒரு பொருளுக்கான காப்புரிமை வழங்கப்படுகிறது. ஆனால் பல மேலை நாடுகளில் ஒரு பொருளுக்குக் காப்புரிமை வழங்கிய பிறகே, அதற்கான மறுப்பு வாதங்களுக்கு இடங்கொடுப்பார்கள். எனவே நம்மிடமிருந்து உயிரியல் திருட்டுகள் நடந்து முடிந்து உலகளாவிய வகையில் அங்கீகாரம் பெற்ற பிறகே, நாம் திருட்டுக் கொடுத்தது நமக்கே தெரிய வரும் என சராசரி இந்தியன் பயப்படுவதில் நியாயம் இருக்கிறது.
இவற்றிற்கெல்லாம் நியாயமான வழிமுறைகளை உள்ளடக்கிய சட்டத்தினை இயற்றுவதும், உலகளாவிய வகையில் அதற்கான பணிகளில் ஈடுபடுவதும் அரசு, விஞ்ஞானிகள் மற்றும் அந்தந்தத் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களின் கடமையாகும். ஏனெனில் அறிவுசார் சொத்துரிமை சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு, உயிரியல் திருட்டுகள் நிறுத்தப்படா விட்டால், வேப்பம் பூ ரசம் வைப்பதற்கு அமெரிக்காவிலும் கருவேப்பிலைத் துவையல் அரைப்பதற்கு அண்டார்டிகாவிலும் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக