பிரபலமான இடுகைகள்

வியாழன், 5 மே, 2011

வறுமையை கைதூக்கி விடுமா வளமை?

தில்லியில் உள்ள தேசிய நடைமுறைப் பொருளாதார ஆராய்ச்சிக்குழு அண்மையில் இந்திய சந்தைக்கான மக்கள் தொகை விவர அறிக்கை - 2002 என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது. சந்தை விற்பனைக்காக இது வெளியிடப்பட்டாலும் இதில் உள்ள விவரங்கள் அனைவரும் அறிய வேண்டியவையாகும்.
இந்தியாவில் உள்ள பல்வேறு குடும்பங்களை வருமான அடிப்படையில் இந்த அறிக்கை பிரித்துக்காட்டுகிறது. ஆண்டு வருமானம் ரூ. 35,000க்குக் கீழ் உள்ளவர்கள் கீழ்த்தட்டு வர்க்கம்; ரூ. 35,001- ரூ.70,000 உள்ளவர்கள் கீழ் மத்திய வர்க்கம்; ரூ.70001-1,05,000 மத்திய வர்க்கம்; ரூ. 1,05,001-1.40,000 உயர் மத்திய வர்க்கம்; ரூ.1,40,000க்கு மேல் உள்ளவர்கள் உயர்ந்த வர்க்கம் என்று வகுத்துள்ளது.
இதே போல் நுகர்வு அடிப்படையிலும் குடும்பங்களைக் கீழ்க்கண்டவாறு வகுத்துள்ளது.
1. மிகப் பணக்காரர்கள்: கார் அல்லது ஜீப் உள்ள குடும்பங்கள்.
2. வசதியானவர்கள்: மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், குளிர்சாதனங்கள், கலர் டி.வி., போன்றவை உடைய ஆனால் கார் இல்லாத குடும்பங்கள்.
3. வருமான ஏணியில் ஏறிக்கொண்டிருப்பவர்கள்: விடியோ, கிரைண்டர், தையல் மெஷின், கறுப்பு வெள்ளை டி.வி. போன்றவை உள்ளவர்கள்.
4. ஆசைப்படுபவர்கள்: சைக்கிள், மின் விசிறி, அயர்ன் பாக்ஸ் போன்றவை உடைய குடும்பங்கள்.
5. ஏழைகள்: கைக்கடிகாரம், டிரான்சிஸ்டர், ரேடியோ, பிரஷர் குக்கர் போன்றவை உடைய குடும்பங்கள்.
வருமான அடிப்படையிலும் நுகர்வு அடிப்படையிலும் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை அட்டவணை 1-ல் உள்ளது.
இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது வருமானத்துக்கும் நுகர்வுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருப்பது போல் தெரியவில்லை. வசதியான குடும்பங்கள் 5.68 கோடியாக இருக்கும் பொழுது மத்திய தரம், உயர் மத்தியதரம் இரண்டும் சேர்ந்து 3.44 கோடி குடும்பங்கள்தான் இருக்கின்றன.
வருமானத்துக்கு அதிகமாகவே நுகர்வு நிலை உள்ளது. கடன் வாங்கியோ அல்லது கணக்கில் வராத பணத்தின் மூலமாகவோ சில பொருள்களை அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலை இருப்பது தெரிகிறது. இன்னொன்று, இன்றியமையாத அடிப்படை வசதிகளை விடவும் சில நுகர்வுப் பொருள்களை மக்கள் விரும்புகிறார்கள். குறிப்பாக தனி சமையலறை, கழிப்பறை போன்ற வசதிகள் வீட்டில் இல்லாத குடும்பங்களிலும் நிச்சயமாக டி.வி. இருக்கிறது. கிராமப்புறங்களில் ஐந்து வீட்டுக்கு ஒரு வீட்டில் டி.வி. இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
அகில இந்திய நிலையிலிருந்து தமிழ்நாட்டு நிலைக்கு வருவோம். வருமான அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள குடும்பங்களின் நிலை அட்டவணை 2-ல் உள்ளது.
மொத்தக் குடும்பங்களில் 72.51 சதவிகிதம் ஏழை மற்றும் கீழ் மத்திய தர குடும்பங்கள். 27.49 சதவிகிதம் மத்திய தரம் மற்றும் அதற்கு மேல் உள்ள குடும்பங்கள்.
மேல் தட்டில் உள்ள 28 சதவிகிதம் யார் யார் என்று பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் அமைப்பு சார்ந்த இனங்களில் உள்ள மாதச் சம்பளக்காரர்கள், நடுத்தர மற்றும் அதற்கு மேலும் உள்ள விவசாயிகள், டாக்டர், வக்கீல் போன்றவர்கள், சிறு முதலாளிகள், தொழில் அதிபர்கள் போன்றவர்கள். அரசு ஊழியர்களில் கடைநிலை ஊழியர்கள், கீழ் மத்தியதரத்திலும், இளநிலை உதவியாளர்கள் மத்திய தரத்திலும் செகண்டரி கிரேட் ஆசிரியர்கள் உயர் மத்திய தரத்திலும் மற்ற அனைத்து அரசு ஊழியர்களும் உயர்நிலையிலும் வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவரின் தொழில் ரீதியாகப் பார்த்தால் விவசாய மற்றும் இதர கூலித் தொழிலாளர்கள் குடும்பங்கள் ஏறத்தாழ 48 சதவிகிதம் உள்ளன. சொந்த விவசாயம் செய்பவர்கள் 16.8 சதவிகிதம். நெசவாளர்கள், தச்சு, கொல்லு வேலை போன்ற தொழிலாளர்கள் 3 சதவிகிதம் உள்ளனர். மாதச் சம்பளக்காரர்கள் 20 சதவிகிதம். இதிலே அரசு ஊழியர்கள் 10 சதவிகிதம் இருக்கலாம். சிறு கடை வைத்திருக்கும் வணிகர்கள் 5 சதவிகிதம்.
ஒட்டுமொத்தமாகப் பார்ப்போமேயானால் 28 சதவிகிதக் குடும்பங்கள் ஓரளவு வசதியாகவும் 72 சதவிகிதக் குடும்பங்கள் குறைந்த வருமானம் உள்ளவையாகவும் உள்ளன. மேலேயுள்ள 28 சதவிகிதத்தினரிடம்தான் வாங்கும் சக்தி உள்ளது. கீழே உள்ள 72 சதவிகிதத்தினரிடம் உழைக்கும் சக்தியே உள்ளது. இந்த வாங்கும் சக்திக்கும் உழைக்கும் சக்திக்கும் இணைப்பு இருந்தால்தான் கீழே உள்ளவர்கள் மேலே வர முடியும்.
மக்கள் தொகை மிகுந்த நமது நாட்டில் மனித ஆற்றல் மிகுந்து இருக்கிறது. இந்த ஆற்றலைப் பயன்படுத்தி ஆக்கப்படும் பொருள்கள், வாங்கிப் பயன்படுத்தப்பட்டால்தான் பொருள்களை உற்பத்தி செய்பவர்கள் பயனடைய முடியும். எனவே, வாங்கும் சக்தி உள்ளவர்கள் எந்த அளவுக்கு மனித சக்தி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வாங்குகிறார்கள் என்பதை ஒட்டியே பெருவாரியான உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரமுடியும்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் நான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தில் பணியாற்றிய பொழுது, வசதி உள்ளவர்கள் வாரத்துக்கு ஒரு நாள் கதராடை அணிந்தால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பிழைக்க வழி கிடைக்கும் என்பதை உணர்ந்து
வறியோர் வாழ்வில் களைவீர் இடரேவாரம் ஒரு நாள் அணிவீர் கதரே!
என்று விளம்பரப்படுத்தினோம். அது இன்றைக்கும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் உயருவதற்குக் கஞ்சித் தொட்டியோ, பிரியாணியோ தேவையில்லை. வசதி உள்ளவர்கள் வாரத்துக்கு ஒரு நாள் கைத்தறி ஆடைகளை அணிந்தால் போதும். இதை சிவகாசி மகளிர் கல்லூரி மாணவிகள் முதலிலே செய்தது மகத்தான விஷயம். அதைத் தொடர்ச்சியாக செய்து வரவேண்டும்.
தற்பொழுது பெப்ஸி, கோககோலா போன்ற குளிர்பானங்கள் பிரச்சினையாகிவிட்டன. இதிலே நச்சுப் பொருள்கள் இருக்கின்றன என்று ஓர் ஆய்வு சுட்டிக்காட்ட அனைவரும் பழரசங்களையும் இளநீரையும் குடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். இது ஓர் அன்றாட நடைமுறையாக வேண்டும். பத்து பாட்டில் கோலா குடிக்கும்பொழுது ஒரு பாட்டில் இளநீரோ, பதநீரோ, குடித்தால் ஏழை மக்கள் பயன்பெறுவார்கள். பிளாஸ்டிக் பொருள்கள் வாங்கச் செலவிடப்படும் பணத்தில் 10 சதவிகிதம் பனை ஓலைப் பொருள்களில் செலவு செய்யலாம்.
வாங்கும் சக்தி உள்ளவர்கள் வாங்கி நுகரும் பொருள்களில் பத்தில் ஒரு பங்கு, மனித ஆற்றலைப் பயன்படுத்தி உற்பத்தியாகும் பொருள்களை வாங்கினால்கூடப் போதும். வாங்கும் சக்தி உள்ள 28 சதவிகிதத்தினர் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் சுமார் 10 காசு, 72 சதவிகிதமாய் உள்ள உழைக்கும் சக்திக்குப் போய்ச் சேரும்.
இதைச் செய்வது வசதி உள்ளவர்களின் கடமையாகும். இதைத்தான் நமது கலாசாரமும் வற்புறுத்தி வந்திருக்கிறது. ஒப்புரவு அறிதல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் வலியுறுத்துவதும் இதைத்தான்.
இதை மேலும் தெளிவாகவும் அழகாகவும் ஓர் உவமை மூலம் நீதி நெறி விளக்கம் சுட்டிக்காட்டுகிறது.
வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பின்தூங்குங் களிறோ துயருறா - ஆங்கது கொண்(டு)ஊரும் எறும்பிங் கொருகோடி உய்யுமால்ஆருங் கிளையோடு அயின்று
யானை சாப்பிடும் பொழுது சிறிது கீழே விழுந்துவிட்டால் யானைக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டு விடாது. ஆனால் அதைக் கொண்டு ஒரு கோடி எறும்புகள் தங்கள் சுற்றத்தோடு பிழைத்துக்கொள்ளும் என்று குமரகுருபரர் கூறுகிறார். எறும்பைப்போல உழைக்கின்ற மக்கள் வறிய நிலையில் இருக்கின்றார்கள். இந்த வறுமையை, வளமை கைதூக்கிவிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக