பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

கலைஞர் நாத்திகவாதியா, ஆத்திகவாதியா? (Is Karunanidhi is a Theist or Atheist?)



வாழ்த்துவதும் தான் வாழ" என்றொரு வாக்கு உண்டு. இறைவனையும் சரி, இன்ன பிறரையும் சரி, நாம் வரிந்து கொண்டு வாழ்த்துவது நாம் நன்றாக வாழ வேண்டும் என்ற நோக்கும் சேர்த்துதான். நாட்டில் முக்கியமான பண்டிகை நாட்களிலும் சரி, சுதந்திர தினம், குடியரசு நாள் ஆகிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாட்களிலும் சரி நாட்டின் தலைவர்கள் வாழ்த்து தெரிவிப்பது என்பது ஒரு மரபு.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எதில் எல்லாம் அரசியல் புகவேண்டாமோ அங்கெல்லாம் அரசியல் அனாவசியமாக நுழைவது வாடிக்கையாகிவிட்டது. தீபாவளித் திருநாள் இந்திய தேசம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப் பெரிய பண்டிகை. தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் இந்துமதத்துடன் தொடர்புபட்டிருந்தாலும், பொதுவாக மற்ற மதத்தினரும்கூட தீபாவளியை ஒரு கொண்டாட்டமாகவே கருதுகிறார்கள். தமிழ்நாட்டில் பொங்கலைவிட, தீபாவளி மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுவதை யாரும் மறுத்துவிட முடியாது. பொங்கலுக்குப் புதுத்துணி எடுக்க முடியாதவர்கள் கூட தீபாவளிக்கு எப்படியாவது புதுத்துணி எடுக்கிறார்கள். பட்டாசு வெடிக்கிறார்கள். இனிப்பு செய்து உண்டு, கொடுத்து மகிழ்கிறார்கள். தமிழ்நாட்டின் சர்வ கட்சித் தலைவர்களும் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்கிறார்கள். இப்போதைய முதலமைச்சர் தவிர.
ரம்ஜானுக்கும் கிறிஸ்துமசுக்கும் வாழ்த்து சொல்லும் கலைஞர், தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை. இதற்கு காரணம், கடவுள் மறுப்புக் கொள்கை என்றால் அவரைப் பொறுத்தவரை இந்துமதக் கடவுள்களை மட்டுமே மறுப்பதாக இருக்கிறது. ரம்ஜானுக்கும் கிறிஸ்துமசுக்கும் வாழ்த்துச் சொன்னால் அது மற்ற மதங்களில் கடவுள் இருப்பதாக அவர் ஒத்துக் கொள்வதாகத்தானே அர்த்தமாகும்? ஒருவருக்குத் தான் பிறந்த மதத்தில் நம்பிக்கையோ பற்றோ குறைந்தால், வேறு ஒரு மதத்திற்கு மாறுவதில் தவறில்லை. அது தனிமனித உரிமை எனலாம். ஆனால் ஒரு மதத்தில் இருந்து கொண்டு அந்த மதக் கோட்பாடுகளை மதிக்காமல் வேறு மதத்தைப் போற்றுவதாக பாவனை செய்வது அந்த மதத்தினரைக் கவர்ந்து கிளுகிளுப்பூட்டி ஓட்டுக்களைப் பெறுவதற்காக மட்டுமே எனும்போது, அந்த நபர் பிறந்த மதத்தையும் மதிக்கவில்லை- மற்ற மதத்தினரையும் உண்மையாக மதிக்கும் எண்ணம் இல்லை என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.
"தீபாவளி ஆரியர் பண்டிகை, பொங்கல்தான் திராவிடப் பண்டிகை" என்று வாதிட்டால் - இதுவும் ஒரு திராவிட மாயை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. வடகிழக்கு மிசோரம் மாநிலம் உட்பட பல வட மாநிலங்களில் அறுவடைநாள் கொண்டாடப்படுகிறது. கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் கூட விவசாயிகள் அறுவடை நாளைக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் எல்லோரும் திராவிடர்களா? உழைப்பிற்கு மரியாதை தரும்நாள் என்பதற்காக பொங்கல் வாழ்த்து என்றால், தீபாவளியின்போது அரசு ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பது ஏன்? முதலமைச்சருடைய டி.வி.யில் தீபஒளி சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் பட்டிமன்றம், குத்தாட்டம் இதெல்லாம் ஒளிப்பரப்பிக் காசு பார்க்கலாமாம். டாஸ்மாக் கடைகளில் தீபாவளி சிறப்பு மகசூல் செய்ய அரசே கூடுதல் ஸ்டாக் வைத்து விற்கலாமாம். ஆனால் தீபாவளியை மனமுவந்து கொண்டாடும் தமிழர்களுக்கு மரியாதைக்காகவாவது வாழ்த்து சொல்லக் கூடாதாம் - இது என்ன கொள்கை?
மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்கு முரசு கொட்டுபவர்கள் முற்றத்தில்தான், மங்கலகரமான தொழில் பெயர்களும் பகுத்தறிவைப் பறைசாற்றுகின்றன. கடவுள் நம்பிக்கை என்பது ஒரு தனிமனித சுதந்திரம் என்பது நமக்கும் புரியும். ஆனால், இத்தகைய விநோத நாத்திகர்களுக்கு, ஆன்மிகர்களையும், ஆத்திகர்களையும் கிண்டல் செய்யும் உரிமை இல்லை. விடுமுறை சிறப்பு நிகழ்ச்சியில் எதையோ காட்டி காசு பார்க்க மட்டும் விநாயகர் வேண்டுமாம்!
கடவுள் நம்பிக்கையுள்ள பெரும்பான்மைத் தமிழர்களின் மனங்களைப் புண்படுத்துவதுதான் நாத்திகமா? வேறு மாநிலத்தையும் மதத்தையும் சேர்ந்த தமிழக ஆளுநர் கூட, தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்கிறார். வேறு மதத்திலும், வேறு நாட்டிலும் பிறந்த சோனியா காந்தி கூட தீபாவளி வாழ்த்து தெரிவிக்கிறார். தனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் பல கோடித் தமிழர்கள் கொண்டாடும் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டியது ஒரு மாநில முதல்வரின் தார்மிக கடமையல்லவா? தொடர்ந்து கலைஞர் தெரிந்தோ தெரியாமலோ இந்தத் தவற்றைச் செய்வது, தமிழக மக்களை- குறிப்பாகப் பெரும்பான்மையான இந்துக்களை அவமதிக்கிற செயலாகத்தான் தெரிகிறது.
பிற மதப் பண்டிகைகளின்போது அவர்களுடன் இப்தார் விருந்திலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திலும் கலைஞர் கலந்து கொள்வது தவறில்லை. அது பாராட்டப்பட வேண்டியது. அதேசமயம் மக்கள் தொகையிலும் ஓட்டு வங்கியிலும் பெரும்பான்மை வகிக்கும் இந்துப் பண்டிகை தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது குற்றமல்ல என்றாலும் குறைதான். பெரியார், அண்ணா கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமானால் தி.மு.க.தான் ஆட்சியில் மீண்டும் அமரவேண்டும் என்றும், அதற்காக மட்டுமே ஆட்சியை விரும்புவதாகவும் சொல்லிக் கொள்ளும் கலைஞர், வருடாந்திர தீபாவளி போனஸை உழைப்பாளிகள் தினமான மே 1-ம் தேதிக்கு மாற்றி தேர்தலுக்கு முன் அரசாணை பிறப்பிப்பாரா?
இந்தியாவின் பெருகும் பொருளாதார வலிமையைக் கண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா கூட தீபாவளிக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவிக்கிறாரே - அப்படியென்றால் இது மக்களுக்கு அளிக்கும் மரியாதை என்பது மாநில முதல்வராகவும் மூத்த அரசியல் தலைவராகவும் இருப்பவருக்குப் புரியாமல் எப்படிப் போகும்? முதல்வர்தான் வாழ்த்து தெரிவிக்கவில்லை -இந்து அறநிலையத்துறை என்றொரு அமைச்சகம் இருக்கும் தமிழ்நாட்டில் தீபாவளித் திருநாளில் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும் சூழ்நிலையில், அறநிலையத்துறை அமைச்சராவது, முதலமைச்சர் சார்பில் வாழ்த்து தெரிவித்திருந்தால் அது ஆறுதலாக இருந்திருக்கும். அப்படியும் நடக்கவில்லை என்னும்போது அறநிலையத்துறையையும் இன்னொரு வருவாய்த்துறையாகத்தான் நினைத்திருக்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
நோட்டுக்களால் ஓட்டுக்களைப் பெற முடியும் காலமிது. உண்மைதான். ஆனால், அதற்காக மக்களின் உணர்ச்சிகளை ஒரேயடியாக உதாசீனப்படுத்த நினைப்பது அரசியல்வாதிகளுக்கு - அதுவும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு நல்லதல்ல. மக்கள் எதையும் எப்போதும் பொறுத்துக் கொண்டுவிடுவார்கள் என்று எதிர்பார்த்து அரசியல்வாதிகள் ஏமாந்துவிடக் கூடாது. அரசியல்வாதிகளைவிட, மக்களுக்கு அரசியல் நன்றாகவே புரியும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக