நீதிதேவதையின் கண்கள் இங்கே கட்டப்பட்டிருப்பது நியாயத்தை ஒருபோதும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகவா?. பாரபட்சமின்றி சார்புத்தன்மையற்று ஒருபால் கோடாமையோடு செயல்படும் ஆன்மத்துணிவு கொண்டதென நம்பப்பட்ட நீதித்தறையின் மீது சந்தேகம் பாரிக்கிறது விஷமாக. எவ்விதத் தலையீடுமற்ற சுதந்திரமான நீதித்துறை என்னும் கனவை அரிக்கும் கரையான்கள் அதனுள்ளேயே ஊறித் திமிர்க்கின்றன. இப்போது தேவை சுதந்திரமா கண்காணிப்பா? எவரின் கேள்வியையும் எதிர்கொள்ளாது வளர்ந்த பிரிட்டிஷ்பாணி மூளையும் வேலையும், மக்களின் கேள்வியெழுப்பும் உரிமையை மதிக்கும் ஜனநாயக மாண்பை உள்ளேற்குமா? சமீபத்திய நிகழ்வுப்போக்குகள் அதன் உள் வளரும் அழிவை முன்னறிவிக்கின்றனவா...1எல்லோரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். சரி, சட்டம் யாருக்கு கட்டுப்பட்டது... சமூகத்திற்கா, நீதிமன்றங்களுக்கா...? நீதிமன்றங்கள் சமூகத்திற்கு உட்பட்டவையா அல்லது அதற்கும் மேலானவையா...? கேள்விகள் எழுகின்றன அனந்தமாய். பதில் தேடும் முயற்சி நீதிமன்ற அவமதிப்பாகி கடுந்தண்டனைத் தாக்குமோ... அச்சம் மேலோங்கி அடக்கிவிடுகிறது. இருப்பினும் ஒரு சாமானியக் குடிமகன் தனது எளிய ஐயங்களை வெளிப்படுத்த இந்நாட்டின் நீதிமன்றங்கள் அனுமதிக்கும் என்று நம்பியே தொடங்க வேண்டியுள்ளது முயற்சியை.பொதுவாகவே, சட்டம் யாவற்றுக்கும் முன்பாகத் தோன்றி இன்னின்னது இப்படியிப்படி இருக்குமாறு உத்தரவிட்டதன் பேரிலேயே சமூகத்தில் சகலமும் உருவானதான புனிதத்தோற்றம் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அனாதிக்காலந்தொட்டு சட்டப்படியே சமூகம் இயங்குவதாயும் அதன்முன்னே அனைவரும் சமம் என்றும் நம்புகிற மூடப்பழக்கம் நீடிக்கிறது நெடுங்காலமாய்.சமூக வளர்ச்சிநிலையின் ஒவ்வொரு கட்டத்திலும் அப்போதைக்கு அரசியல், பொருளாதார, பண்பாட்டு அரங்கில் செல்வாக்குள்ள பிரிவினர் தமது நலன்களை தற்காத்துக் கொள்ள செய்திடும் ஏற்பாடாகவே சட்டங்கள் எப்போதும் இருந்திருக்கின்றன, இருக்கவும் போகின்றன. இவர்கள் ஒழுங்கு, கடமை, உரிமை, பொறுப்பு ஆகிய கற்பிதங்களை சட்டம் என்று தமக்கேற்றாற்போல் வரையறுத்து அதை பரிபாலனம் செய்வதே நீதி என்கின்றனர். அதாவது அவர்களின் மேலாண்மைக்கு எதிர்ப்பு வராமலும் வருமானால் அடக்கி நிலைநிற்கவுமான ஏற்பாடுகளைத்தான் அரசியல் பதம் கொண்டு சட்டம், நீதி என்கின்றனர். இயல்பாகவே இச்சட்டங்கள் இன்னொரு சாராருக்கு எதிரானதாக இருப்பதில்தான் அவற்றை உருவாக்கியவர்களின் நலனும் வெற்றியும் பொதிந்திருக்கிறது. இதை மறைக்கவே சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்ற ஆரவாரப் பிரகடனத்தின் முழக்கம். எதுவுமே பொதுவின்றி எதிரெதிர் நலன்கள் பொருதும் களமாக பிரிந்திருக்கும் சமூகத்தில் சட்டம் மட்டும் பொதுவானதாயிருக்கும் என்று நம்புவது கடவுளுக்கு முன் அனைவரும் சமம் என்று சொல்லிக்கொண்டே கோயிலிருக்கும் தெருவில் நடமாடக்கூட ஒரு சாராரை அனுமதிக்காத போலிமைக்கு ஒப்பானதாகும். செல்வாக்கு பெற்றவர்களின் சட்டத்தால் பாதிக்கப்படுவோர், அதிலிருந்து மீள மேற்கொள்ளும் எத்தனிப்புகளை சட்டவிரோதம் என்று அறிவித்து குற்றவாளிகளாக்கி தண்டிக்கும் நோக்கோடும் அதிகாரத்தோடும் நிறுவப்பட்டவையே அரசு இயந்திரத்தின் நிறுவனங்கள் அனைத்தும். எனில், நீதிமன்றங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மேற்சொல்வதெனில், இவ்வேற்பாட்டில் மட்டற்ற அதிகாரம் பூண்டவையாய் முன்னிற்பவை நீதிமன்றங்களே. மட்டுமன்றி, லஞ்ச ஊழல், அதிகார துஷ்பிரயோகம் ( அதிகாரம் என்பதே துஷ்பிரயோகம் தான் என்பது தனி விசயம்), சமன் செய்யவியலாத பாகுபாடுகளால், நிலவும் சமூக அமைப்பின்மீதும் அதனை வெளிப்படையாக கட்டிக்காக்கும் அரசாங்கத்தின் மீதும் அவநம்பிக்கை கொள்ளும் மக்களை, சாதுர்யமான சில தீர்ப்புகளின் வழியாக தணியச்செய்யும் அரசியல் நடவடிக்கையிலும் இவை ஈடுபடத் தயங்குவதில்லை. பொறுப்புவாய்ந்த ஒரு அரசாங்கத்தின் ஸ்தானத்தில் நீதிமன்றங்கள் தம்மை அவ்வப்போது இருத்திக் கொள்வதானது மக்களைக் காப்பதற்காக அல்ல. மாறாக இங்கிருக்கும் சட்டத்தையும் அதன் வழியாக பேணப்படுகிற சமூக அமைப்பையுமே பாதுகாக்கத் துடிக்கின்றன.இன்றைய நீதிமன்றங்களும் சட்டங்களும் இந்திய சமூகத்தின் தேவையிலிருந்து உருவானவையல்ல. காலகாலத்துக்கும் இந்தியாவைச் சுரண்டிக் கொழுக்கும் தனது சாம்ராஜ்யக் கனவைத் தூர்த்த சுதந்திரப் போராளிகளை அடக்கியொடுக்க பிரிட்ஷாரால் நிறுவப்பட்டவை. எத்தனை உயிர்கள் சட்டத்தின் பேரால் பறிக்கப்பட்டிருக்கின்றன...? குடித்த ரத்தம் கொஞ்சமா..? தேசமே திறந்தவெளி சிறைச்சாலையாக சிறுமைப்பட்டு கிடந்ததே... நாகரீக சிந்தையுள்ள யாரும் வெட்கிக்கூசும் அடக்குமுறைகள் அனைத்தும் சட்டத்தைக் காப்பதற்காக நீதிமன்றங்களால் செயல்படுத்தப்பட்டவை தானே...? இந்தியர் அனைவரையுமே எதிரியாய் கருதி உருவாக்கப்பட்ட அக்கொடிய சட்டங்களில் எதையெல்லாம் நீக்கியிருக்கிறோம் சுதந்திரத்திற்கு பிறகு...? அடித்த செருப்பையே கிரீடமாக சூடிக்கொள்ள அடிமை கூட ஒப்பமாட்டான். ஆனால் நாமோ, இயல்பிலேயே இந்தியர்களுக்கு மேலானதாகவும் எதிராகவும் நிறுவப்பட்ட பிரிட்டிஷ் சட்டங்களை அப்படியே வைத்திருக்கிறோம். நீதிமன்ற நடைமுறைகளைக்கூட மாற்றிக்கொள்ளவில்லை. மக்களின் உரிமைப் போராட்டங்களை ஒடுக்கவும் பத்திரிகைகளின் கழுத்தை நெரிக்கவும் பிரிட்டிஷ் சட்டங்கள் தான் மிகவும் தோதானதாக இருக்கும் என்று ஆதிக்கசக்திகளும் ஆட்சியாளர்களும் கருதியதால் விடுதலையடைந்த ஒரு நாட்டின் பிரத்யேகத் தேவைகளை முன்வைத்து சுயேச்சையான நீதியமைப்பை கண்டடைய வேண்டிய அவசியத்தை உணரவேயில்லை.2அழுக்கண்டாத ஒளிவட்டம் சூடி, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு, தன்னைத்தானே வழிநடத்திக் கொள்ளும் அமானுஷ்யத்தன்மை கொண்ட காவிநிறக் கட்டிடம் என்பதான மாயபிம்பத்தை நீதிமன்றமென இன்றைய மக்கள் தொடர்புச்சாதனங்கள் உருவாக்கியுள்ளன. சைலன்ஸ் என்று டவாலி சத்தம் எழுப்பிய மாத்திரத்தில் உலகமே மயான அமைதியோடு நீதிமன்றத்தை கவனிக்கவேண்டியுள்ளது. கதாநாயகனும் வில்லனும் மோதும் பரவசக்களமாக கோர்ட்சீன்களை சினிமாவில் கண்டிருந்தவர்கள் வாதி, பிரதிவாதிகளாய் காத்திருக்கின்றனர், கோர்ட்டே சொல்லிருச்சு என்ற சமாதானத்தில் மூழ்குவதற்காக. தாம் காத்திருப்பது நீதிக்காகத்தானா என்ற சந்தேகம் உருக்குகிறது அவர்களை.நீதிமன்றம் என்பதும் சராசரி மனிதர்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது என்பதை நம்ப மறுக்கிறது மந்தை மனம். சாதி, மதம், இனம், மொழி, பிரதேசம், சுயநலம், ஏற்றத்தாழ்வு, கட்சியரசியல், ஆணாதிக்கம், சொத்துடமை உணர்வுகளால் பீடிக்கப்பட்டதொரு சமூகத்தின் கூட்டுச்சிந்தனைகளால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படும் ஒருவரே நீதிபதியாக பொறுப்பு வகிக்கிறார் என்பதையும் காணத்தவறுகிறோம். காலம் உதறியெறிந்த கருத்துக்களை சுமக்கும் பிற்போக்குத் தன்மையை கடந்தவரா, நிகழ்காலச் சமூகத்தின் இயங்குவிதிகளை அறிந்து செயலாற்றும் அக்கறைகள் அவருக்கு உண்டா, எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளை கையளிக்கும் வகையில் முன்னோக்கிப் பார்க்கும் திறனுண்டா என்பதற்கெல்லாம் நிரூபணமேதும் தராத ஒருவரே நமக்கு நீதிபதியாகிறார். சராசரி உணர்வு நிலையிலிருந்தும் குறுகிய நம்பிக்கைகளிலிருந்தும் விடுபட்டு யாவரையும் ஒன்றென பாவிக்கும் தகுதிநிலை கொண்டவரா என்று சோதித்தறிய அளவுகோல் ஏதுமற்ற நிலையில் நீதியை நிர்வகிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல் போன்றே ஒரு தொழிற்கல்வியாக சட்டத்தைப் பயின்று அதன்ரீதியில் சம்பாதிப்பது என்று தேர்ந்து கொண்டதைத் தவிர நீதியை நிலைநாட்டுவதில் அவருக்கு தனித்த விருப்புறுதி எதுவும் கிடையாது. சட்டம் வேறு, நீதி வேறு.நீதிபதியானவர், ஏற்கனவே வரையறுத்து இறுகிய சட்டகத்திற்குள் தன்னைப் பொருத்திக் கொள்வதோடு தன் பணி நிறைவடைந்ததாக கருதுவதுதில்லை. மாறாக, அதற்குள்ளிருந்து தனது நோக்கங்களோடே செயல்படுகிறார். சமூகம் குறித்த அவரது புரிதலின்படி அமைந்தப் பார்வையே சட்டப் புத்தகங்களிலிருக்கும் வார்த்தைகளை போர்த்திக்கொண்டு தீர்ப்பாக வெளிவருகிறது. சமூகத்தில் எந்தப் பிரிவின்மீது அவரது அக்கறைகள் சார்ந்துள்ளனவோ அவற்றுக்கு அனுசரணையாக சட்டத்தின் இண்டுஇடுக்குகளில் புகுந்து துழாவியெடுத்து தீர்ப்பாக முன்வைக்கிறார். இதன்மூலம் ஒருசாராருக்கு சாதகமாகவும் அதன் காரணமாகவே மறுசாராருக்கு பாதகமாகவும் அவர் தன்னியல்பாகவே முடிவெடுப்பவராகிறார். கூடவே, தன் வார்த்தையே இப்போதைக்கு இறுதியானது என்கிற அதிகார மயக்கமும் சேர்ந்துவிட அவர் ஒரு எதேச்சதிகாரியாகவும் செயல்படுகிறார். விசாரணைகளின் போது நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எவ்வித சட்டப்பூர்வ அந்தஸ்தும் இல்லாததை அறிந்தேயிருப்பினும் வரம்பற்ற முறையில் பலவிதமான விமர்சனங்களை வெளிப்படுத்துகின்றனர். இப்படியான கருத்துக்களின் பரபரப்பில் மக்கள் திளைத்துக் கிடக்கையில் அதற்கு நேரெதிரான தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. அப்படியானால் தன்னை திருப்பி விமர்சிக்க முடியாத பலஹீனராக குற்றஞ்சாட்டப்பட்டவர் இருக்கிறார் என்கிற மனநிலையின் முறுக்கில் தான் நீதிபதியானவர் பேசுகிறாரோ?தீர்ப்பை கண்டிக்கவோ விமர்சிக்கவோ முடியாது. மேல்முறையீடு தான் செய்யமுடியும். இந்த சட்டப்பூர்வ பாதுகாப்பு வளையத்திற்குள் பத்திரமாக இருந்துகொண்டு தான் நீதிபதியானவர் தீர்ப்பிடுகிறார். மேல்முறையீடு ஏற்பாடே நீதிபதிகள் தவறு செய்வதற்கான சாத்தியத்தை ஒப்புக்கொள்வதுதானே... தவறிழைப்பதற்கான மனநிலையைத் தாண்டியவரென்ற புனிதமுத்திரை யாருக்குமில்லை.ஒரு வழக்கை இந்த தேதிக்கு முன்பாக விசாரிக்கக்கூடாது அல்லது விசாரித்தேயாக வேண்டும், இவர்தான் விசாரிக்கவேண்டும் அல்லது விசாரிக்கக்கூடாது, இந்த மாநிலத்தில் விசாரிக்கக்கூடாது அல்லது விசாரிக்கவேண்டும் என்றெல்லாம் சமீபகாலங்களில் தொடரப்படும் வழக்குகளும் தீர்ப்புகளும் நீதித்துறையின் நம்பகத்தன்மை மாயையானது என்பதை நீதிமன்றங்களே தம்மையறியாமல் அம்பலப்படுத்திவிடுகின்றன. இவர் விசாரித்தால் இன்னாருக்கு பாதகமாக அல்லது சாதகமாகத்தான் தீர்ப்பிருக்கும் என்ற அனுமானத்தில் அவருக்கு பதிலாக வேறொருவர் தான் விசாரிக்க வேண்டும் என்பதே புதிதாக விசாரிக்கப் போகிறவர் எவ்வாறு விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்ற மறைமுக உத்தரவும் நிர்ப்பந்தமும் தானே...கீழமை நீதிபதிகள் சட்டத்திற்குட்பட்டே தீர்ப்பளிப்பதாக தெரிவித்துக் கொண்டாலும் மேல்முறையீட்டில் அத்தீர்ப்புகள் மாற்றப்படும் பட்சத்தில் கடும் கண்டனத்திற்கும் உள்ளாகிறது. அப்படியானால் சட்டத்தின் படி எது சரியான தீர்ப்பு... ? ஒரு தீர்ப்பு மட்டுமே சரியெனில் தவறான தீர்ப்பளித்த நீதிபதியை வழிநடத்தியது எது? எந்தவொரு தவறுக்கும் ஏதாவதொரு சட்டப்பிரிவைக் காட்டி தண்டனை வழங்குவதும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்துவதுமாகிய ஏற்பாடுகள் இருக்கும்போது தவறான தீர்ப்பளித்த எத்தனை நீதிபதிகள் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் எல்லாமே மக்களுக்கு பதில்சொல்லும் பொறுப்பில் இருக்கும்போது நீதித்துறை மட்டும் மக்களுக்கு மேலானதாக, மேலிருந்து பார்த்து கீழுக்கு நீதி இறைப்பதாக, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக இருப்பது மக்களாட்சி முறைக்கு ஏற்புடையதா? வெளிப்படைத்தன்மையற்ற இந்நிலைமையே நீதிபதியின் தன்னிச்சைப் போக்குகளுக்கும் முறைகேடுகளுக்கும் வழிவகுக்கிறது.3பெரும் தொழிற்சாலைகளின் பெருக்கம், அகண்ட தார்ச்சாலைகள், வான் தொடும் கட்டிடங்கள், பேரணைகள் ஆகியவையே நாட்டின் முன்னேற்றம் வளர்ச்சி என்ற கருத்துடைய நீதிபதியால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தீர்ப்பைத் தரமுடியாது.தலித் சமூகத்தைச் சார்ந்த நீதிபதி உட்கார்ந்த இருக்கையை கங்கை நீர் கொண்டு கழுவி தீட்டு போக்குமளவுக்கு சாதிப்பித்தும் துவேஷமும் உச்சத்திலேறியவரிடம் தீண்டாமை குறித்த வழக்கொன்று வருமானால் அவர் தமது சொந்த நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் மூட்டை கட்டிவைத்துவிட்டு சட்டத்தின் வழிகாட்டுதலை மட்டுமே ஏற்று செயல்பட வாய்ப்பில்லை. உல்லாசமான பாலியல் தொடர்புகளில் நாட்டம் கொண்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் துயரத்தையும் அவமானத்தையும் உணரமுடியாது. நெறியற்ற வகையில் சொத்துசேர்ப்பது தவறில்லை என்று லஞ்சம் வாங்கும் ஒருவர் நீதிபதியானால் பொதுச்சொத்தை சூறையாடுவோருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கமாட்டார். நாற்பதாயிரம் ரூபாய் லஞ்சத்திற்கு நாட்டின் ஜனாதிபதிக்கே பிடிவாரண்டு பிறப்பிக்கும் நீதிபதி இருக்கும் மாநிலத்தில், மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் அங்கு தங்களுக்கு நீதிகிடைக்காது என்று அஞ்சுவதில் தவறென்ன?நீதிபதியின் வார்த்தைகள் ஒரு வழக்கின் தீர்ப்பாகவும் அதுவே நீதிமன்றத்தையே அறிந்திராதவரையும்கூட கட்டுப்படுத்தும் சட்டமாகவும் மாறிவிடுகிறது. எனவே சமூகத்தில் தாங்கள் வகிக்கும் பாத்திரத்திற்குரிய பொறுப்புணர்வையும் நடுநிலைத்தன்மையையும் உணர்ந்து செயல்பட வேண்டியவராகிறார். இந்தியச் சமூகத்தின் பொதுவாழ்வைச் சீரழிக்கும் பிறழ்நெறிகள் அனைத்தையும் கடந்தவர்கள் நீதிபதிகள் என்று நம்பியே சாமானிய மக்கள் இன்னும்கூட நீதிமன்றங்களை நாடிவருகின்றனர். ஆனால் எல்லா வகையிலும் புரையோடியும் அடக்குமுறைக் கருவி என்பதற்கான முழு அர்த்தத்திலும் ஆளும்வர்க்கத்தின் கருத்தியல் செல்வாக்கை வெகுமக்கள் மீது திணிப்பவையாக அரசு இயந்திரம் முழுவதுமே கட்டமைக்கப்பட்டிருக்கும் சூழலில் நீதித்துறை மட்டும் களங்கமற்று மக்களின் நலன் காப்பதாய் இருக்கமுடியாது.கொலை, கொள்ளை, திருட்டு, வன்முறை, பாலியல் கொடுமை போன்ற வழக்குகளில் வெளியாகும் தீர்ப்பானது எவ்வகையாய் இருப்பினும் அவற்றில் நேரடியான பாதிப்பு அல்லது பலன் தனிநபர் அல்லது தனிக்குடும்பம் என்ற அளவிலானது. அதற்கு ஏற்கனவே உள்ள குற்றவியல் சட்டங்களைப் பற்றிய குறைந்தபட்ச தெளிவே போதுமானதாய் இருக்கக்கூடும். ஆனால் சமூகவியல் பிரச்னைகளை உள்ளடக்கமாகக் கொண்ட வழக்குகளில், நாட்டின் அரசியல் பொருளாதார பண்பாட்டுச் சூழலையும் இணைத்து பரிசீலிக்க வேண்டியுள்ளது. தீர்ப்பினால் பலனடையக் கூடியவர்கள் சமூகத்தின் எப்பிரிவினர் என்கிற பார்வை மிக அவசியமானதாய் இருக்கிறது. ஆனால் அதிகாரத்தின் வலிய தடுப்பரண்களால் வெகுமக்களின் வாழ்க்கையிலிருந்து அன்னியப்பட்டு, மேட்டிமை மனோபாவத்தோடு ஒதுங்கிக் கிடக்கிற நீதிபதிகளுக்கு சமூக அக்கறையுடன் கூடிய பார்வை கூடிவருவது எளிதல்ல. இந்தப் பின்னணியோடுதான் சுயநிதிக் கல்லூரிகள் குறித்த வழக்கை பரிசீலிக்க வேண்டியுள்ளது.சுயநிதி கல்லூரி முதலாளிகள் அந்தரத்திலிருந்து வந்தவர்களல்ல. தம்முடைய கைக்காசை கொட்டியாவது இந்த சமூகத்திற்கு கல்வி புகட்டியேத் தீர்வது என்கிற லட்சியவாதிகளுமல்ல. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஒரு நேர்காணலில் சொன்னதுபோல, கல்விச்சாலையை நடத்துவதைவிட சாணியுருண்டை விற்பதுதான் லாபம் என்ற சூழ்நிலை உருவாகுமானால் இவர்களெல்லாம் மாடுமேய்க்கும் தொழிலுக்குப் போய்விடக்கூடியவர்களே. இந்த சமூகத்தின் பல்வேறு வளங்களையும் பயன்படுத்தியே கல்லூரி தொடங்குவதற்கான மூலதனத்தை திரட்டியுள்ளனர். ஏற்கனவே அரசு உருவாக்கியிருக்கும் கட்டமைப்பை பயன்படுத்கின்றனர். அரசின் பல்வேறு கல்விச்சாலைகளில் உருவான அறிவாளிக் கூட்டத்தை தமது கூலியடிமைகளாகப் பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஊரிலும் இம்முதலாளிகளின் கல்விக்கொள்ளை தொடருவதில் ஏதேனும் பிரச்னைகள் எழுமானால் சட்டம் காவல் நீதி நிர்வாகம் என எல்லா முனைகளிலிருந்தும் அரசின் உதவியைப் பெறுகின்றனர். ஆகவே சமூகத்தின் பொதுவளங்களை, அரசின் உதவிகளை மிகுதியாக பயன்படுத்தி நடக்கும் ஒரு துறையில் அல்லது தொழிலில் அரசின் தலையீடும் அரசுக்கான பங்கும் தேவையாயிருக்கிறது. ஒருவேளை சுயநிதிக் கல்லூரி நடத்துவதை கொள்ளைத் தொழிலாக அறிவித்துவிடும் பட்சத்தில் அத்தகைய குற்றத்தில் பங்கு கேட்பது ஒரு அரசின் தார்மீக நெறிகளுக்கு புறம்பானது என்று வேண்டுமானால் ஒதுங்கிக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. கல்வியை ஒரு தொழிலாகவும் வியாபாரமாகவும் சீரழித்திருக்கும் சுயநிதி கல்லூரிகள் விசயத்தில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. வெளிநாட்டிலிருந்து படிக்க வருபவர்களுக்கு இடவொதுக்கீடு வேண்டும் என்று அக்கறை கொள்ளும் நீதிமன்றம் உள்நாட்டிலிருப்பவர்களுக்கு மறுப்பதற்கு என்ன நியாயத்தை கைக்கொண்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது மக்களிடையே. ஒருவேளை நியாயம் எதுவென்பதை நீதிமன்றம் அறிந்தேயிருந்தாலும் சட்ட நுணுக்கங்கள் அடிப்படையில் வேறுவழியின்றி கல்லூரி முதலாளிகளுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதோ என்றும் கூட அப்பாவித்தனமாய் நம்பியிருந்தனர். எனவேதான் இடஒதுக்கிட்டை உறுதிசெய்யும் வகையில் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று அரசை வலியுறுத்தும் நிலை உருவானது. ஆனால் அரசாங்கத்தின் அம்முயற்சியை உச்சநீதிமன்றம் எதிர்கொண்ட முறை தேசத்தை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமூகத்தின் பொதுவளங்களை பயன்படுத்தி இயங்கும் ஒரு நிறுவனம் சமூகத்திற்கான பங்களிப்பை முறையாக திருப்பிச் செலுத்தவேண்டும் என்ற இயற்கை நீதியின் அடிப்படையில் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு என்று வலுப்பெற்றுவரும் கோரிக்கைக்கு சுயநிதி கல்லூரிகளில் இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு பெரும் பின்னடவை உருவாக்கும். இடஒதுக்கீட்டுக்கு எதிரான உயர்சாதி மனோபாவம் ஒரு நாட்டின் உயரிய நீதி பரிபாலன அமைப்பிலிருந்தும் வெளிப்படுமானால் அது தனியார்த்துறையில் இடஒதுக்கீட்டை மறுப்பவர்களுக்கு வலுவூட்டுவதாக அமையும். இப்பிரச்னையில் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றிருப்பது நம்பிக்கையளிக்கிறது. நீதிபதிகளையும் கண்காணிக்கும் அமைப்பொன்றை உருவாக்கும் மத்திய அரசின் அறிவிப்பானது நீதித்துறையை ஜனநாயகப்படுத்துகிற- சமூகத்திற்கு கட்டுப்பட்ட ஒரு அமைப்பாக அதை நெறிப்படுத்தக் கூடிய முயற்சி என்ற அளவில் வரவேற்க வேண்டியுள்ளது.சட்டப்புத்தகங்களுக்குள் புதைந்திருக்கும் கண்களைப் பெயர்த்தெடுத்து சமூக நிலவரங்களை பார்ப்பதற்கும் அதில் நீடிக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் அநீதிகளையும் களைவதற்கு தனது சட்டஅறிவை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் சிந்திக்கிற மனவலிமை தமக்கு உண்டு என்பதை நிரூபித்த நீதிபதிகளை கடந்த காலத்தில் இந்நாடு கண்டிருக்கிறது. நீதித்துறையை சக்திமிக்க வகையில் சமரசமின்றி பயன்படுத்தி சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் ஒடுக்குண்ட மக்கள் கையூன்றி எழவும், நாகரீகச் சமுதாயமாய் நாடு பரிணமிப்பதைத் தடுக்கும் அதிகார அத்துமீறல்களை தடுக்கவும் தமது சட்ட மேதமையையும் அயராத உழப்பையும் நல்கிய கண்ணியம்மிக்க அந்நீதிபதிகளை நாடு பெருமிதத்தோடு நினைவுகொள்கிறது. விதிவிலக்குகள் எப்போதும் விதிவிலக்குகளே. விதிவிலக்குகள் பெரும்பான்மையாக மாறுவதற்கான முயற்சி என்பது எளிய மக்களுக்கு நீதியை கொண்டு செல்வதற்கான நெடிய அரசியல் போராட்டத்தினுடன் இணைந்தே இருக்கிறது.