பிரபலமான இடுகைகள்

திங்கள், 29 டிசம்பர், 2014

தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்
திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்
அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.
உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை
தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்
“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''
என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்
ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.
உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.
தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.
நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்.
பெருங்குடி
எங்கள் கிராமம்


முட்டிக்கால் சேற்றில்
கொறவை மீன் பிடித்த
பெரியவாய்க்கால்
தூர்ந்து போய் வெகுநாளாயிற்று....

தார்சாலைகளில்
வெது வெதுப்பாய்
மாட்டுசானம் பாத்து
பலவருடமாயிற்று....

வீட்டுக்கு வெள்ளையடிப்பது
அவுட்டாப் பேஷனாகிவிட்டது...

ஒரு வார
பொங்கல் பண்டிகை உற்சாகத்தை
தொலைகாட்சிகாரனுங்க
களவாடி கொண்டுவிட்டார்கள்...

சாலைகளில்
பளிர் கலர்களில் உடை அணிந்த
தாவாணி பெண்கள்
காணாமலே போய்விட்டனர்...

சிறுவர்களின்
கில்லி ஆட்டம்,
பாண்டி ஆட்டம்,
ஐஸ்பாரி, போன்றவை
தற்கொலைசெய்து கொண்டு விட்டன....

கல் அடுப்பு கட்டி
விறகுபுகை கண்கலங்க வைத்து,
மண்பானையில் பொங்கலிட்டது
அரிதாய் போய்.... காஸ் அடுப்பும்,
ஸ்டெய்னஸ் ஸ்டிலும்,
எங்கள் கலாச்சாரமாயிற்று...

பழனிச்சாமி பொண்ணையும்
பொண்ணுச்சாமி பையனையும்
இலகுவாய் அடையாளபடுத்திக்கொண்ட
பழக்கம் அழிந்து விட்டது...

மறைவாய் கபடி விளையாண்ட
அம்மன் கோவில் கூத்துப்பொட்டல்
கான்கிரீட் காடாய் மாறிவிட்டது...

எல்லை காவல் தெய்வம்
ஐயனாரை சுற்றி...
கிரிக்கெட்
பயிர்விளைச்சல் அமோகம்...

மஞ்சு விரட்டு நடந்த
முருகன் கோவில் மைதானத்தில்,
நான்கு பசுக்களும்,இரண்டு காளைகளும்
சாங்கியத்துக்கு பலூன்கொம்போடு நிற்க்கின்றன...

மரவள்ளி கிழங்கு,
சுருளி கிழங்கு,
சக்கரை வள்ளி கிழங்கு,
கடலை மிட்டாய் விற்ற பாட்டிகளும்...
ஆலமரத்தடியும்,
அரசமரத்தடியும்,
சடுதியில் மறைந்து விட்டன...

விரல் முனை சுண்ணாம்புக்கறை
பெரியவ்ர்கள் காணாமல் போய்,
உள்ளங்கையில் ஹான்ஸ் தேய்க்கும்
இளைஞர்கள் வந்து விட்டார்கள்....

சைடில் ரோஜா பூ வைத்து நடந்தாள்...
அவள் தேவதை என்று உருவகபடுத்தியவர்கள்...
லோ ஹீப்பையும்,லோ நெக்கையும்
ஏற்றுக்கொண்டு விட்டார்கள்...

முப்பதே குடும்பங்கள் வாழ்ந்த கிராமம்....
முன்னூறு நகர்களாய் விரிந்து கிடக்கின்றது....

எல்லாம் மாறி
மாறாமல் இன்னும்
துரு பிடித்த வண்ணம் நிற்கிக்கின்றது....
எங்களதேர்மட்டும்தான்

வியாழன், 14 ஜூன், 2012

இதற்கு என்ன தலைப்பு வைப்பது?

ஊழல் / லஞ்சத்தால் இந்தியா மிக மோசமாக கெட்டு வருகிறது. அரசியல்வாதிகள் அதிகாரிகள் அனைவரும் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். மக்களின் சிரமத்தை உணர யாருக்கும் நேரமில்லை. அவரவர் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்று தான் கணக்குப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். முன்பு கொஞ்சம் பயமாவது இருந்தது தற்போது அனைத்தும் எல்லை மீறி போய் விட்டது. மக்களின் பணத்தை யார் அதிகம் வீண் செய்வது என்று போட்டி வைத்தால் அதற்கு கடுமையான போட்டி நிலவும் நிலை தான் தற்போது [...] இதற்கு என்ன தலைப்பு வைப்பது?

சனி, 5 மே, 2012

மின்பற்றாக்குறை மிகப் பெரும் சிக்கலாக மாறியது ஏன்?

மின்பற்றாக்குறையால் தமிழகம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. பற்றாக்குறையைத் தீர்க்கவியலாமல் தமிழக அரசு தவிக்கிறது. தமிழக மக்களும் இந்தச் சிக்கலைக் கடந்துசெல்லும் வழி தெரியாமல் திண்டாடுகின்றனர். தமிழகத்தில் அமைந்துள்ள பஞ்சாலைகள், நூற் பாலைகள் போன்ற சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் தொடர்ச்சியான மின்வெட்டால் உற்பத்தித் தேக்கம் கண்டுள்ளன. விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் தொழில் வளமும் விவசாய வளமும் மிகுந்த கொங்கு மண்டலம் அதிகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மின்வெட்டல்லாமல் அறிவிக்கப்படாத மின்வெட்டாலும் தமிழகத்தின் தொழில்நடத்துநர்களும் தமிழக மக்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். முறைப்படுத்தப்படாத இந்தச் சீரற்ற மின்தடையிலிருந்து மாநிலத்தைக் காப்பாற்ற வேண்டிய முக்கியப் பொறுப்பை எப்படி அரசு நிறைவேற்றப்போகிறது என்பதை யூகிக்க முடியவில்லை.
பொருளாதாரரீதியான முன்னேற்றத்திற்குத் தொழிற்துறை முன்னேற்றமும் விவசாய அபிவிருத்தியும் அவசியம். இவை இரண்டும் பெரிதும் நம்பியிருப்பது மின் ஆற்றலைத்தான். தமிழகத்திற்குத் தேவையான மின் ஆற்றல் ஏறக்குறைய 11,000 மெகா வாட். ஆனால் உற்பத்தியாவதோ 8000 மெகாவாட்தான். இடைப்பட்ட 3000 மெகாவாட் மின்சாரம்தான் நமது நிம்மதியைக் குலைத்துள்ளது; தமிழகத்தை அந்தகாரம் சூழக் காரணமாகியுள்ளது. பற்றாக்குறையைச் சமாளிக்கத் தேவைப்படும் நடவடிக்கைகளை அரசு சரிவர எடுக்கவில்லை என மார்க்சிஸ்ட், தேமுதிக, பாமக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் குற்றம்சுமத்தியுள்ளன. அரசு கையறு நிலையிலுள்ளது. இவற்றுக்கு நடுவில் மாட்டிக்கொண்ட மக்கள் தங்கள் வீட்டு, விவசாய, தொழில் உபயோகத்திற்குப் போதுமான தங்கு தடையற்ற மின்சாரத்துக்காகக் காத்திருக்கின்றனர்.
மின்வெட்டைக் கண்டிக்கும் முகமாகப் பிப்ரவரி 10 அன்று கோவையில் முப்பத்தி ஆறு தொழிலமைப்புகளைச் சேர்ந்த ஏறக்குறைய மூன்று லட்சம் தொழிலாளர்கள் அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர். இதனால் 250 கோடி ரூபாய்வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறுதொழில் மற்றும் குறுந்தொழில் சங்கம் சார்பாகவும் பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சார்பாகவும் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தமிழகத்தில் மூன்று ஷிப்டுகளாக இயங்கிவந்த தொழிற்துறை நிறுவனங்கள் இரண்டு ஷிப்டுகளை மட்டுமே நடத்துகின்றன அதுவும் ஜெனரேட்டர் உதவியுடன். ஜெனரேட்டர் வசதிகள் இல்லாத சிறு நிறுவனங்கள் ஒரே ஒரு ஷிப்டு உற்பத்தியைத்தான் மேற்கொள்கிறது. டீசல் விலையும் பெருமளவில் உயர்ந்துள்ளதால் ஜெனரேட்டர் உதவியுடன் உற்பத்தி நிகழ்த்தப்படும்போது ஒரு யூனிட்டுக்குப் பதினைந்து ரூபாய்வரை செலவிட நேர்வதாகத் தெரிகிறது. விவசாயத்திற்குத் தரப்படுவதுபோல் டீசல் மானியம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மின்பற்றாக்குறை மிகப் பெரும் சிக்கலாக மாறியது ஏன் என்பது முக்கியக் கேள்வி. மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்கும் சந்தைப் பொருளாதாரமும் தனியார்மயக் கொள்கையும் இதற்கான முக்கியக் காரணங்கள். முன்பு தமிழக மின்சார வாரியம் நமக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்துவந்தது. மின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு அவற்றிடமிருந்து மின்சாரத்தைப் பெற வேண்டிய நிலைக்கு மின் வாரியம் வந்தது. அவை நிர்ணயித்த விலைக்கு மின்சாரத்தைப் பெற வேண்டிய நிலையால் மின் வாரியத்தின் செலவு அதிகரித்தது. கையிருப்பு சிறிது சிறிதாகக் குறைந்து அதுவரையிலும் மின்மிகை மாநிலமாக இருந்துவந்த தமிழ்நாடு மெதுவாக மின்பற்றாக் குறை கொண்ட மாநிலமாக மாறியது. மின் உற்பத்தித் திட்டம் ஒன்று நிறுவப்பட்டு அது பயன்தரத் தொடங்க ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகள்வரை தேவைப்படும். அதிகரித்து வரும் தேவையை மனத்தில் கொண்டு அதற்கேற்றபடி உற்பத்தியைப் பெருக்கத் தேவையான நடவடிக்கைகளில் தொடர்ந்து வந்த தொலை நோக்குப் பார்வை அற்ற அரசுகள் மெத்தனப்போக்கைக் கடைப்பிடித்தன. கடந்த பல பத்தாண்டுகளாக மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றி வரும் கழகங்கள் இரண்டுமே ஒரே விதமான மனப் போக்கைத்தான் கொண்டிருந்தன. காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஒரு ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் அடுத்த ஆட்சியில் கண்டுகொள்ளப்படாத நிலை தொடர்வதால் இது போன்ற இன்னல்களை நாம் அனுபவிக்க வேண்டியுள்ளது.
பயன்பாட்டு இலக்கை எட்ட இயலாமல் மின் ஆற்றல் தடுமாறுகையில் இலவசத் திட்டங்கள் என்னும் பெயரில் மின் சாதனங்களை வாரி இறைத்தது திமுக. அதே வழிமுறையை அதிமுகவும் பின்பற்றுவது ஆபத்தின் அறிகுறி. இலவசத் திட்டங்களை மக்கள் விரும்பவில்லை என்பதற்குக் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்குக் கிடைத்த பரிதாபமான தோல்வியே எடுத்துக்காட்டு.
முறையான பராமரிப்பு இல்லாததன் காரணமாக எண்ணூர் அனல் மின்நிலையம் உள்ளிட்ட மின் உற்பத்தி நிலையங்களில் ஏழு அலகுகள் முழுவதுமாகச் செயலிழந்துள்ளன. பற்றாக்குறையோடு இயந்திரக் கோளாறும் இணைந்துகொள்ளச் சிக்கலில் மேலும் சில முடிச்சுகள் விழுந்துள்ளன. மின் உற்பத்தி நிலையங்கள் முடங்காமல் இயங்கத் தகுந்த பராமரிப்பும் கண்காணிப்பும் அவசியம். இதைப் போன்ற நெருக்கடியான தருணங்களில் மின் உற்பத்தி தடைப்படுவதைத் தடுக்காமல் அரசு வேடிக்கை பார்ப்பதற்குக் காரணம் அதன் அலட்சியமே. தவிர நிலக்கரியின் விலை டன்னுக்கு 45 டாலரிலிருந்து கடந்த ஐந்தாண்டுகளில் 120 டாலராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அனல் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புனல் மின்நிலையப் பராமரிப்புச் செலவு அதிகமென்பதாலும் நீர்வசதியின்மையாலும் நீரிலிருந்து எடுக்கப்படும் மின்சார அளவும் குறைந்துவிட்டது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டிருப்பதால் தற்போது உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. வெளியிலிருந்து மின்சாரத்தைப் பெறுவதிலும் சிக்கல்கள் நிறைந்துள்ளன. குஜராத் மாநிலத்திலிருந்து யூனிட்டுக்கு 4.20 ரூபாய் விலையில் 500 மெகாவாட் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் இருந்தும் மின்தொடர் நெருக்கடி காரணமாக அதாவது மின்சாரச் செலுத்தீட்டுச் சரிவர அமைக்கப்படாததால் 235 மெகாவாட் அளவிலேயே மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. மத்திய தொகுப்பிலிருந்து 2500 மெகாவாட் மின்சாரத்திற்குப் பதில் 1000 மெகாவாட் தான் வழங்கப்படுகிறது. மின்வாரியத்தின் நிதி நெருக்கடி காரணமாக மின்சாரம் வாங்கியவகையில் காற்றாலைகளுக்குத் தரப்பட வேண்டிய கோடிக்கணக்கான ரூபாயும் ஆந்திராவிடமிருந்து மின்சாரம் வாங்கியதற்கு அளிக்கப்பட வேண்டிய தொகையும் நிலுவையிலுள்ளன. இப்படியாக அவசியப்படும் மின்சாரத்தைத் திரட்ட முடியாமல் மின்னாற்றல் சார்ந்த பல்வேறு திசைகளிலும் நீடித்துவரும் இடர்ப்பாடுகள் தமிழகத்தைச் சூழ்ந்துள்ள இருளை அடர்த்தியாக்குகின்றன.
இத்தனை நெருக்கடியிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான மின்சாரம் தங்குதடையின்றி வழங்கப்படுகிறது. பெருமளவில் நிதிவசதியுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் டீசல்சார்ந்து மின் உற்பத்தி செய்துகொள்ள முடியும். ஆனால் அவற்றுக்கு மின்தடை விதிக்கப்படாமல் நிதிவசதியற்ற சிறுநிறுவனங்களுக்கு மின் தடையென்னும் சூழலை உருவாக்கியுள்ள அரசின் செயல் அபத்தமன்றி வேறென்ன? தமிழகத்தின் பிற பகுதிகள் பல மணிநேரம் இருளில் மூழ்கியிருந்தும், சென்னையில் பெரிய அளவில் மின்வெட்டு இல்லாததன் காரணம் குறித்தும் யோசிக்க வேண்டியுள்ளது. அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கத்தினரும் ஊடகவியலாளர்களும் குவிந்துள்ள சென்னையில் இத்தகைய மின்வெட்டு தொடருமானால் அது அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடியாக மாறும். ஊடகங்கள் பிரச்சினையைத் தீவிரமான தளத்திற்கு நகர்த்திச்செல்லக்கூடும். இவற்றைத் தவிர்ப்பதற்காகவே தலைநகரில் தளர்த்தப்பட்ட மின்வெட்டு அமலாக்கப்பட்டுள்ளதாக நம்ப வேண்டியுள்ளது. தமிழகத்தின் பிற பகுதி மக்களுக்கு இந்தப் பாரபட்சம் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு மத்திய தொகுப்பிலிருந்து அதிக மின்சாரம் அளிக்கப்பட வேண்டுமென மத்திய அரசைக் கோரிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தமிழகத்தின் கூடங்குளம் அணுமின்நிலையம் இக்குறையைத் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்டிருந்தும் அதற்கெழுந்துள்ள எதிர்ப்பின் காரணமாக உற்பத்தி நடைபெறாததால் இத்தகைய நெருக்கடியை மக்கள் சந்திக்க நேர்ந்துள்ளதாகத் தெரிவித்த கருத்தில் மறைந்திருக்கும் உள்நோக்கம் வெளிப்படையானது. தமிழகத்தின் தொழில்முனைவோர்களும் தற்போதைய பற்றாக்குறையைச் சமாளிக்கக் கூடங்குளம் அணுமின் நிலைய உற்பத்தி அவசியம் எனக் குரலெழுப்பியுள்ளது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது. பித்தம் தெளிய அணுசக்தி உதவாது என்பதை உணர முடியாத அளவுக்கு மக்கள் குழம்பிப்போயுள்ளனர். பொதுமக்கள் மனத்தைக் கூடங்குளம் விஷயத்தில் ஆதரவாகத் திருப்புவதற்காகக் கையாளப்பட்டுள்ள தந்திரமான நடவடிக்கையோ இந்த மின்வெட்டு எனச் சந்தேகம் எழுந்தாலும் அதில் முழுவதும் உண்மையில்லை. கடந்த மூன்றாண்டுகளாகவே தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நிலவுகிறது. கூடங்குளப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், கடந்த ஐந்தாண்டுகளாக மாநில முதல்வராக இருந்த கருணாநிதியும் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த ஆர்க்காடு வீராசாமியும்தான் தமிழகத்தில் தற்போது நிலவும் மின்தட்டுப்பாட்டுக்குக் காரணமென்றும் கடந்த ஆட்சியில் தமிழ் நாட்டில் மின்பற்றாக்குறையைப் போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு அவர்கள் விளக்க வேண்டுமென்றும் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ள கருத்தை இங்கு நினைவுகூரலாம்.
தமிழகம் மின்வெட்டில்லாத மாநிலமாக்கப்படும் எனச் சூளுரைத்து ஆட்சியில் அமரும் கழகங்கள் பதவியிலமர்ந்தபின்பு அதைச் சுலபமாக மறந்துவிடுகின்றன. இரு கழகங்களின் தலைவர்களும் சகிப்புத் தன்மையற்றவர்கள் என்பதோடு ஒருவர்மீது ஒருவர் பழிபோடத் தயங்காதவர்கள். 2011 ஆகஸ்டு நான்கு அன்று தமிழகச் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் 2012 ஆகஸ்டு முதல் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போதோ 2012 ஜூன் மாதம் முதல் படிப்படியாக மின்பற்றைக் குறை தவிர்க்கப்பட்டு 2013 மத்தியில் முற்றிலும் இல்லாமல் ஆக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார் ஜெயலலிதா எனக் குறைகூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பழுதடைந்திருந்த குத்தாலம், வழுதூர் நிலையங்கள் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் வடசென்னை விரிவாக்கத் திட்டத்தின் ஒன்றாம் அலகில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய அனல்மின் கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் வள்ளூர் 500 மெகாவாட் மின்திட்டம் 2012 மார்ச்சிலும் இதன் இரண்டாம் அலகு 2012 ஜூனிலும் மூன்றாம் அலகு 2013 பிப்ரவரியிலும் மேட்டூர் மின்நிலையத்தின் 600 மெகாவாட் மூன்றாம் நிலை 2012 மார்ச்சிலும் வடசென்னை அனல் மின் நிலைய இரண்டாம் அலகு 2012 அக்டோபரிலும் செயல்படத் தேவையானவகையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக ஜூன் மாதத்தில் 1,950 மெகாவாட்டும் அக்டோபரில் மேலும் 600 மெகாவாட்டும் கூடுதலாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அவர். மின்திட்டங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட அவசியமான நடவடிக்கைகளை எடுக்க முந்தைய திமுக அரசு தவறியதே இப்போதைய பற்றாக்குறைக்குக் காரணமெனத் தன் பங்குக்குத் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா. அவர் குறிப்பிட்டுள்ள 2013 ஜூன் வரை மின்வெட்டு கண்டிப்பாக நீடிக்கும் என்பது மட்டுமே நமக்கான குறிப்பு.
மின்சாரத்தைப் பொறுத்தவரை எட்டுத் திக்கும் மதயானை சூழ்ந்துள்ள நிலைமைதான். இதிலிருந்து தப்புவது எளிதல்ல. இச்சிக்கலிருந்து விடுபடத் தேவையான தீர்வில் அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும். ஊர்கூடி இழுக்க வேண்டிய தேரை யாரோ ஒருவர் நிலைநிறுத்திவிட இயலாது. சூரிய சக்தியால் மின்சார உற்பத்தி செய்யும் வழிமுறைகள் குறித்து அரசு அக்கறையோடு ஆலோசிக்க உகந்த தருணம் இது. அதிகரிக்கப்பட்ட மின் உற்பத்தி என்னும் இலக்கை அடையும்வரை பற்றாக்குறையைச் சமாளிக்க சிக்கனம் கைகொடுக்கும் என்பதை நாம் உண்மையாகவே நம்ப வேண்டும். எல்லாவற்றுக்கும் அரசுமீது பழிபோட்டுவிட்டுக் குடிமைச் சமூகம் ஒதுங்கிக்கொள்ள முடியாது. ஜனநாயக அரசின் செயல்பாட்டில் மக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். மின் சிக்கன நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். அதைத் திறந்த மனத்துடன் புரிந்துகொள்ள நாம் தயாராக வேண்டும். சின்னச் சின்னதாக நாம் மேற்கொள்ளும் மின் சேமிப்பு பெரிய அளவில் உதவும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மின்சாரத்தை விரயமாக்கும் பண்பாட்டிலிருந்து நாம் எல்லோருமே மீண்டுவர வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் கடமையில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பங்கு உள்ளது. வெறுமனே அரசியல் கட்சிகளையும் மின்வாரிய அதிகாரிகளையும் மட்டும் குறைகூறிக்கொண்டிருந்தால் நமது வீடும் மாநிலமும் மேலும் மேலும் இருளில் மூழ்க நாமும் மறைமுகக் காரணமாகிவிடுவோம்.
அந்தமாதிரி ஏதும் நடக்காமல் இருக்க இன்றிலிருந்தே மின்சாரத்தை சேமிக்க ஆரம்பிப்போம்; இருளில்லா வாழ்க்கை வாழ்வோம் என்று நாம் அனைவரும் முடிவெடுத்தால் அதன் பலனை நாம் கண்கூடா பார்க்கலாம்!

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

உங்கள் மீதான நம்பிக்கையை இழக்காதீர்கள்!

உங்கள் மீதான நம்பிக்கையை இழக்காதீர்கள்!

உடல் ரீதியான, பாலுணர்வு ரீதியான துன்புறுத்தல்கள், வன்முறை, பொருளாதார ரீதியாக பாதுகாப்பற்ற நிலை, குறைந்த அந்தஸ்தில் இருப்பதை எண்ணி வருந்துதல், மற்றவர்களைப் பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டுமே என்ற தொடர் பொறுப்பு ஆகியவற்றால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
சோகமான எண்ணங்கள், தினமும் ஒரு முறை யாவது, அனைவருக்கும் எழுந்து, அடங்குவது இயற்கையே. ஆனால், ஒரு சோக நினைப்பு, தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு மேல் ஒருவர் மனதை ஆக்கிரமிக்கும்போதோ, அன்றாட வேலைகளில் தடையை ஏற்படுத்தும்போதோ, அந்த நிலை தான், "மன அழுத்தம்' என்றழைக்கப்படுகிறது.
பிரியமான நடவடிக்கைகளில் நாட்டம் இல்லாமல் இருப்பது, சோர்வு, சுறுசுறுப்பின்மை, தூக்கமின்மை, கவனத் தடுமாற்றம், முடிவு எடுப்பதில் குழப்பம், பசியின்மை அல்லது அளவுக்கு அதிகமாக உண்பது.
எந்த காரணமும் இன்றி, உடலில் எங்காவது வலி தோன்றுவது, எதிர்மறையான நிகழ்வுகளைத் தான் இனி சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணம் ஆகியவை, மன அழுத்தத்திற்கான அறிகுறிகள்.
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றும்; அதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று தோன்றும். பெண்களிடையே மன அழுத்தம் சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.
மன ஓட்டங்களை கட்டுப்படுத்த திணறும்போது...
* நம்பகமான, அக்கறை கொண்ட நண்பர் களிடம், மனக் குறைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
* உடல் ரீதியான, பாலுணர்வு ரீதியான துன்புறுத்தல்கள், பொருளாதார ரீதியாக பாதுகாப்பற்ற நிலை, குறைந்த அந்தஸ்தில் இருப்பதை எண்ணி வருந்துதல், மற்றவர்களைப் பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டுமே என்ற தொடர் பொறுப்பு ஆகியவை இதற்குக் காரணங்களாக அமைகின்றன.
* உங்கள் மனதை சாந்தப்படுத்தும் இசை, தோட்டப் பராமரிப்பு, நல்ல புத்தகங்கள் படிப்பது, மனதுக்குப் பிடித்த உணவு உண்பது.
* உங்கள் மீதான நம்பிக்கையை இழக்காமல் இருப்பது.
* யோகா, தியானம் இவற்றை நாள் தவறாமல் செய்து வருவது.
மேற்சொன்ன நடவடிக்கைகள், உங்கள் மனதை இதப்படுத்தி, மன அழுத்தத்திலிருந்து வெளி வர உதவும்.
மாத்திரையை தவிருங்கள்!
உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிந்தால், அதைத் தீர்க்க, நீங்கள் முழு முயற்சியில் இறங்க வேண்டும்.
மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறும்போது, முதல் கட்டமாக அவர்கள் பிரச்னையைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முற்படுவர். இது நல்லது தான் என்றாலும், முன் பின் தெரியாத ஒருவரிடம், உங்கள் மனக் குறையைச் சொல்ல நீங்கள் தயங்கலாம்.
எனவே, மிக மிக நம்பிக்கையான நண்பர் ஒருவரிடம், உங்கள் பிரச்னையை எடுத்துச் சொல்லுங்கள்; மனதில் உள்ள அனைத்தையும், கொட்டி விடுங்கள். உங்கள் மீது அன்பு வைத்திருப்பவர், நிச்சயம் இதற்கான தீர்வு சொல்வார்.
"மன அழுத்தம் தீர்க்க, மாத்திரை சாப்பிடுகிறேன்' எனக் கிளம்புவதை விட, தற்காலிக உபாயங்களை நாடுவதை விட, மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்ப்பது நல்லது.
 

வியாழன், 8 மார்ச், 2012

சட்டம் சமூகத்திற்கா, நீதிமன்றங்களுக்கா...?



நீதிதேவதையின் கண்கள் இங்கே கட்டப்பட்டிருப்பது நியாயத்தை ஒருபோதும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகவா?. பாரபட்சமின்றி சார்புத்தன்மையற்று ஒருபால் கோடாமையோடு செயல்படும் ஆன்மத்துணிவு கொண்டதென நம்பப்பட்ட நீதித்தறையின் மீது சந்தேகம் பாரிக்கிறது விஷமாக. எவ்விதத் தலையீடுமற்ற சுதந்திரமான நீதித்துறை என்னும் கனவை அரிக்கும் கரையான்கள் அதனுள்ளேயே ஊறித் திமிர்க்கின்றன. இப்போது தேவை சுதந்திரமா கண்காணிப்பா? எவரின் கேள்வியையும் எதிர்கொள்ளாது வளர்ந்த பிரிட்டிஷ்பாணி மூளையும் வேலையும், மக்களின் கேள்வியெழுப்பும் உரிமையை மதிக்கும் ஜனநாயக மாண்பை உள்ளேற்குமா? சமீபத்திய நிகழ்வுப்போக்குகள் அதன் உள் வளரும் அழிவை முன்னறிவிக்கின்றனவா...1எல்லோரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். சரி, சட்டம் யாருக்கு கட்டுப்பட்டது... சமூகத்திற்கா, நீதிமன்றங்களுக்கா...? நீதிமன்றங்கள் சமூகத்திற்கு உட்பட்டவையா அல்லது அதற்கும் மேலானவையா...? கேள்விகள் எழுகின்றன அனந்தமாய். பதில் தேடும் முயற்சி நீதிமன்ற அவமதிப்பாகி கடுந்தண்டனைத் தாக்குமோ... அச்சம் மேலோங்கி அடக்கிவிடுகிறது. இருப்பினும் ஒரு சாமானியக் குடிமகன் தனது எளிய ஐயங்களை வெளிப்படுத்த இந்நாட்டின் நீதிமன்றங்கள் அனுமதிக்கும் என்று நம்பியே தொடங்க வேண்டியுள்ளது முயற்சியை.பொதுவாகவே, சட்டம் யாவற்றுக்கும் முன்பாகத் தோன்றி இன்னின்னது இப்படியிப்படி இருக்குமாறு உத்தரவிட்டதன் பேரிலேயே சமூகத்தில் சகலமும் உருவானதான புனிதத்தோற்றம் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அனாதிக்காலந்தொட்டு சட்டப்படியே சமூகம் இயங்குவதாயும் அதன்முன்னே அனைவரும் சமம் என்றும் நம்புகிற மூடப்பழக்கம் நீடிக்கிறது நெடுங்காலமாய்.சமூக வளர்ச்சிநிலையின் ஒவ்வொரு கட்டத்திலும் அப்போதைக்கு அரசியல், பொருளாதார, பண்பாட்டு அரங்கில் செல்வாக்குள்ள பிரிவினர் தமது நலன்களை தற்காத்துக் கொள்ள செய்திடும் ஏற்பாடாகவே சட்டங்கள் எப்போதும் இருந்திருக்கின்றன, இருக்கவும் போகின்றன. இவர்கள் ஒழுங்கு, கடமை, உரிமை, பொறுப்பு ஆகிய கற்பிதங்களை சட்டம் என்று தமக்கேற்றாற்போல் வரையறுத்து அதை பரிபாலனம் செய்வதே நீதி என்கின்றனர். அதாவது அவர்களின் மேலாண்மைக்கு எதிர்ப்பு வராமலும் வருமானால் அடக்கி நிலைநிற்கவுமான ஏற்பாடுகளைத்தான் அரசியல் பதம் கொண்டு சட்டம், நீதி என்கின்றனர். இயல்பாகவே இச்சட்டங்கள் இன்னொரு சாராருக்கு எதிரானதாக இருப்பதில்தான் அவற்றை உருவாக்கியவர்களின் நலனும் வெற்றியும் பொதிந்திருக்கிறது. இதை மறைக்கவே சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்ற ஆரவாரப் பிரகடனத்தின் முழக்கம். எதுவுமே பொதுவின்றி எதிரெதிர் நலன்கள் பொருதும் களமாக பிரிந்திருக்கும் சமூகத்தில் சட்டம் மட்டும் பொதுவானதாயிருக்கும் என்று நம்புவது கடவுளுக்கு முன் அனைவரும் சமம் என்று சொல்லிக்கொண்டே கோயிலிருக்கும் தெருவில் நடமாடக்கூட ஒரு சாராரை அனுமதிக்காத போலிமைக்கு ஒப்பானதாகும். செல்வாக்கு பெற்றவர்களின் சட்டத்தால் பாதிக்கப்படுவோர், அதிலிருந்து மீள மேற்கொள்ளும் எத்தனிப்புகளை சட்டவிரோதம் என்று அறிவித்து குற்றவாளிகளாக்கி தண்டிக்கும் நோக்கோடும் அதிகாரத்தோடும் நிறுவப்பட்டவையே அரசு இயந்திரத்தின் நிறுவனங்கள் அனைத்தும். எனில், நீதிமன்றங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மேற்சொல்வதெனில், இவ்வேற்பாட்டில் மட்டற்ற அதிகாரம் பூண்டவையாய் முன்னிற்பவை நீதிமன்றங்களே. மட்டுமன்றி, லஞ்ச ஊழல், அதிகார துஷ்பிரயோகம் ( அதிகாரம் என்பதே துஷ்பிரயோகம் தான் என்பது தனி விசயம்), சமன் செய்யவியலாத பாகுபாடுகளால், நிலவும் சமூக அமைப்பின்மீதும் அதனை வெளிப்படையாக கட்டிக்காக்கும் அரசாங்கத்தின் மீதும் அவநம்பிக்கை கொள்ளும் மக்களை, சாதுர்யமான சில தீர்ப்புகளின் வழியாக தணியச்செய்யும் அரசியல் நடவடிக்கையிலும் இவை ஈடுபடத் தயங்குவதில்லை. பொறுப்புவாய்ந்த ஒரு அரசாங்கத்தின் ஸ்தானத்தில் நீதிமன்றங்கள் தம்மை அவ்வப்போது இருத்திக் கொள்வதானது மக்களைக் காப்பதற்காக அல்ல. மாறாக இங்கிருக்கும் சட்டத்தையும் அதன் வழியாக பேணப்படுகிற சமூக அமைப்பையுமே பாதுகாக்கத் துடிக்கின்றன.இன்றைய நீதிமன்றங்களும் சட்டங்களும் இந்திய சமூகத்தின் தேவையிலிருந்து உருவானவையல்ல. காலகாலத்துக்கும் இந்தியாவைச் சுரண்டிக் கொழுக்கும் தனது சாம்ராஜ்யக் கனவைத் தூர்த்த சுதந்திரப் போராளிகளை அடக்கியொடுக்க பிரிட்ஷாரால் நிறுவப்பட்டவை. எத்தனை உயிர்கள் சட்டத்தின் பேரால் பறிக்கப்பட்டிருக்கின்றன...? குடித்த ரத்தம் கொஞ்சமா..? தேசமே திறந்தவெளி சிறைச்சாலையாக சிறுமைப்பட்டு கிடந்ததே... நாகரீக சிந்தையுள்ள யாரும் வெட்கிக்கூசும் அடக்குமுறைகள் அனைத்தும் சட்டத்தைக் காப்பதற்காக நீதிமன்றங்களால் செயல்படுத்தப்பட்டவை தானே...? இந்தியர் அனைவரையுமே எதிரியாய் கருதி உருவாக்கப்பட்ட அக்கொடிய சட்டங்களில் எதையெல்லாம் நீக்கியிருக்கிறோம் சுதந்திரத்திற்கு பிறகு...? அடித்த செருப்பையே கிரீடமாக சூடிக்கொள்ள அடிமை கூட ஒப்பமாட்டான். ஆனால் நாமோ, இயல்பிலேயே இந்தியர்களுக்கு மேலானதாகவும் எதிராகவும் நிறுவப்பட்ட பிரிட்டிஷ் சட்டங்களை அப்படியே வைத்திருக்கிறோம். நீதிமன்ற நடைமுறைகளைக்கூட மாற்றிக்கொள்ளவில்லை. மக்களின் உரிமைப் போராட்டங்களை ஒடுக்கவும் பத்திரிகைகளின் கழுத்தை நெரிக்கவும் பிரிட்டிஷ் சட்டங்கள் தான் மிகவும் தோதானதாக இருக்கும் என்று ஆதிக்கசக்திகளும் ஆட்சியாளர்களும் கருதியதால் விடுதலையடைந்த ஒரு நாட்டின் பிரத்யேகத் தேவைகளை முன்வைத்து சுயேச்சையான நீதியமைப்பை கண்டடைய வேண்டிய அவசியத்தை உணரவேயில்லை.2அழுக்கண்டாத ஒளிவட்டம் சூடி, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு, தன்னைத்தானே வழிநடத்திக் கொள்ளும் அமானுஷ்யத்தன்மை கொண்ட காவிநிறக் கட்டிடம் என்பதான மாயபிம்பத்தை நீதிமன்றமென இன்றைய மக்கள் தொடர்புச்சாதனங்கள் உருவாக்கியுள்ளன. சைலன்ஸ் என்று டவாலி சத்தம் எழுப்பிய மாத்திரத்தில் உலகமே மயான அமைதியோடு நீதிமன்றத்தை கவனிக்கவேண்டியுள்ளது. கதாநாயகனும் வில்லனும் மோதும் பரவசக்களமாக கோர்ட்சீன்களை சினிமாவில் கண்டிருந்தவர்கள் வாதி, பிரதிவாதிகளாய் காத்திருக்கின்றனர், கோர்ட்டே சொல்லிருச்சு என்ற சமாதானத்தில் மூழ்குவதற்காக. தாம் காத்திருப்பது நீதிக்காகத்தானா என்ற சந்தேகம் உருக்குகிறது அவர்களை.நீதிமன்றம் என்பதும் சராசரி மனிதர்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது என்பதை நம்ப மறுக்கிறது மந்தை மனம். சாதி, மதம், இனம், மொழி, பிரதேசம், சுயநலம், ஏற்றத்தாழ்வு, கட்சியரசியல், ஆணாதிக்கம், சொத்துடமை உணர்வுகளால் பீடிக்கப்பட்டதொரு சமூகத்தின் கூட்டுச்சிந்தனைகளால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படும் ஒருவரே நீதிபதியாக பொறுப்பு வகிக்கிறார் என்பதையும் காணத்தவறுகிறோம். காலம் உதறியெறிந்த கருத்துக்களை சுமக்கும் பிற்போக்குத் தன்மையை கடந்தவரா, நிகழ்காலச் சமூகத்தின் இயங்குவிதிகளை அறிந்து செயலாற்றும் அக்கறைகள் அவருக்கு உண்டா, எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளை கையளிக்கும் வகையில் முன்னோக்கிப் பார்க்கும் திறனுண்டா என்பதற்கெல்லாம் நிரூபணமேதும் தராத ஒருவரே நமக்கு நீதிபதியாகிறார். சராசரி உணர்வு நிலையிலிருந்தும் குறுகிய நம்பிக்கைகளிலிருந்தும் விடுபட்டு யாவரையும் ஒன்றென பாவிக்கும் தகுதிநிலை கொண்டவரா என்று சோதித்தறிய அளவுகோல் ஏதுமற்ற நிலையில் நீதியை நிர்வகிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல் போன்றே ஒரு தொழிற்கல்வியாக சட்டத்தைப் பயின்று அதன்ரீதியில் சம்பாதிப்பது என்று தேர்ந்து கொண்டதைத் தவிர நீதியை நிலைநாட்டுவதில் அவருக்கு தனித்த விருப்புறுதி எதுவும் கிடையாது. சட்டம் வேறு, நீதி வேறு.நீதிபதியானவர், ஏற்கனவே வரையறுத்து இறுகிய சட்டகத்திற்குள் தன்னைப் பொருத்திக் கொள்வதோடு தன் பணி நிறைவடைந்ததாக கருதுவதுதில்லை. மாறாக, அதற்குள்ளிருந்து தனது நோக்கங்களோடே செயல்படுகிறார். சமூகம் குறித்த அவரது புரிதலின்படி அமைந்தப் பார்வையே சட்டப் புத்தகங்களிலிருக்கும் வார்த்தைகளை போர்த்திக்கொண்டு தீர்ப்பாக வெளிவருகிறது. சமூகத்தில் எந்தப் பிரிவின்மீது அவரது அக்கறைகள் சார்ந்துள்ளனவோ அவற்றுக்கு அனுசரணையாக சட்டத்தின் இண்டுஇடுக்குகளில் புகுந்து துழாவியெடுத்து தீர்ப்பாக முன்வைக்கிறார். இதன்மூலம் ஒருசாராருக்கு சாதகமாகவும் அதன் காரணமாகவே மறுசாராருக்கு பாதகமாகவும் அவர் தன்னியல்பாகவே முடிவெடுப்பவராகிறார். கூடவே, தன் வார்த்தையே இப்போதைக்கு இறுதியானது என்கிற அதிகார மயக்கமும் சேர்ந்துவிட அவர் ஒரு எதேச்சதிகாரியாகவும் செயல்படுகிறார். விசாரணைகளின் போது நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எவ்வித சட்டப்பூர்வ அந்தஸ்தும் இல்லாததை அறிந்தேயிருப்பினும் வரம்பற்ற முறையில் பலவிதமான விமர்சனங்களை வெளிப்படுத்துகின்றனர். இப்படியான கருத்துக்களின் பரபரப்பில் மக்கள் திளைத்துக் கிடக்கையில் அதற்கு நேரெதிரான தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. அப்படியானால் தன்னை திருப்பி விமர்சிக்க முடியாத பலஹீனராக குற்றஞ்சாட்டப்பட்டவர் இருக்கிறார் என்கிற மனநிலையின் முறுக்கில் தான் நீதிபதியானவர் பேசுகிறாரோ?தீர்ப்பை கண்டிக்கவோ விமர்சிக்கவோ முடியாது. மேல்முறையீடு தான் செய்யமுடியும். இந்த சட்டப்பூர்வ பாதுகாப்பு வளையத்திற்குள் பத்திரமாக இருந்துகொண்டு தான் நீதிபதியானவர் தீர்ப்பிடுகிறார். மேல்முறையீடு ஏற்பாடே நீதிபதிகள் தவறு செய்வதற்கான சாத்தியத்தை ஒப்புக்கொள்வதுதானே... தவறிழைப்பதற்கான மனநிலையைத் தாண்டியவரென்ற புனிதமுத்திரை யாருக்குமில்லை.ஒரு வழக்கை இந்த தேதிக்கு முன்பாக விசாரிக்கக்கூடாது அல்லது விசாரித்தேயாக வேண்டும், இவர்தான் விசாரிக்கவேண்டும் அல்லது விசாரிக்கக்கூடாது, இந்த மாநிலத்தில் விசாரிக்கக்கூடாது அல்லது விசாரிக்கவேண்டும் என்றெல்லாம் சமீபகாலங்களில் தொடரப்படும் வழக்குகளும் தீர்ப்புகளும் நீதித்துறையின் நம்பகத்தன்மை மாயையானது என்பதை நீதிமன்றங்களே தம்மையறியாமல் அம்பலப்படுத்திவிடுகின்றன. இவர் விசாரித்தால் இன்னாருக்கு பாதகமாக அல்லது சாதகமாகத்தான் தீர்ப்பிருக்கும் என்ற அனுமானத்தில் அவருக்கு பதிலாக வேறொருவர் தான் விசாரிக்க வேண்டும் என்பதே புதிதாக விசாரிக்கப் போகிறவர் எவ்வாறு விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்ற மறைமுக உத்தரவும் நிர்ப்பந்தமும் தானே...கீழமை நீதிபதிகள் சட்டத்திற்குட்பட்டே தீர்ப்பளிப்பதாக தெரிவித்துக் கொண்டாலும் மேல்முறையீட்டில் அத்தீர்ப்புகள் மாற்றப்படும் பட்சத்தில் கடும் கண்டனத்திற்கும் உள்ளாகிறது. அப்படியானால் சட்டத்தின் படி எது சரியான தீர்ப்பு... ? ஒரு தீர்ப்பு மட்டுமே சரியெனில் தவறான தீர்ப்பளித்த நீதிபதியை வழிநடத்தியது எது? எந்தவொரு தவறுக்கும் ஏதாவதொரு சட்டப்பிரிவைக் காட்டி தண்டனை வழங்குவதும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்துவதுமாகிய ஏற்பாடுகள் இருக்கும்போது தவறான தீர்ப்பளித்த எத்தனை நீதிபதிகள் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் எல்லாமே மக்களுக்கு பதில்சொல்லும் பொறுப்பில் இருக்கும்போது நீதித்துறை மட்டும் மக்களுக்கு மேலானதாக, மேலிருந்து பார்த்து கீழுக்கு நீதி இறைப்பதாக, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக இருப்பது மக்களாட்சி முறைக்கு ஏற்புடையதா? வெளிப்படைத்தன்மையற்ற இந்நிலைமையே நீதிபதியின் தன்னிச்சைப் போக்குகளுக்கும் முறைகேடுகளுக்கும் வழிவகுக்கிறது.3பெரும் தொழிற்சாலைகளின் பெருக்கம், அகண்ட தார்ச்சாலைகள், வான் தொடும் கட்டிடங்கள், பேரணைகள் ஆகியவையே நாட்டின் முன்னேற்றம் வளர்ச்சி என்ற கருத்துடைய நீதிபதியால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தீர்ப்பைத் தரமுடியாது.தலித் சமூகத்தைச் சார்ந்த நீதிபதி உட்கார்ந்த இருக்கையை கங்கை நீர் கொண்டு கழுவி தீட்டு போக்குமளவுக்கு சாதிப்பித்தும் துவேஷமும் உச்சத்திலேறியவரிடம் தீண்டாமை குறித்த வழக்கொன்று வருமானால் அவர் தமது சொந்த நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் மூட்டை கட்டிவைத்துவிட்டு சட்டத்தின் வழிகாட்டுதலை மட்டுமே ஏற்று செயல்பட வாய்ப்பில்லை. உல்லாசமான பாலியல் தொடர்புகளில் நாட்டம் கொண்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் துயரத்தையும் அவமானத்தையும் உணரமுடியாது. நெறியற்ற வகையில் சொத்துசேர்ப்பது தவறில்லை என்று லஞ்சம் வாங்கும் ஒருவர் நீதிபதியானால் பொதுச்சொத்தை சூறையாடுவோருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கமாட்டார். நாற்பதாயிரம் ரூபாய் லஞ்சத்திற்கு நாட்டின் ஜனாதிபதிக்கே பிடிவாரண்டு பிறப்பிக்கும் நீதிபதி இருக்கும் மாநிலத்தில், மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் அங்கு தங்களுக்கு நீதிகிடைக்காது என்று அஞ்சுவதில் தவறென்ன?நீதிபதியின் வார்த்தைகள் ஒரு வழக்கின் தீர்ப்பாகவும் அதுவே நீதிமன்றத்தையே அறிந்திராதவரையும்கூட கட்டுப்படுத்தும் சட்டமாகவும் மாறிவிடுகிறது. எனவே சமூகத்தில் தாங்கள் வகிக்கும் பாத்திரத்திற்குரிய பொறுப்புணர்வையும் நடுநிலைத்தன்மையையும் உணர்ந்து செயல்பட வேண்டியவராகிறார். இந்தியச் சமூகத்தின் பொதுவாழ்வைச் சீரழிக்கும் பிறழ்நெறிகள் அனைத்தையும் கடந்தவர்கள் நீதிபதிகள் என்று நம்பியே சாமானிய மக்கள் இன்னும்கூட நீதிமன்றங்களை நாடிவருகின்றனர். ஆனால் எல்லா வகையிலும் புரையோடியும் அடக்குமுறைக் கருவி என்பதற்கான முழு அர்த்தத்திலும் ஆளும்வர்க்கத்தின் கருத்தியல் செல்வாக்கை வெகுமக்கள் மீது திணிப்பவையாக அரசு இயந்திரம் முழுவதுமே கட்டமைக்கப்பட்டிருக்கும் சூழலில் நீதித்துறை மட்டும் களங்கமற்று மக்களின் நலன் காப்பதாய் இருக்கமுடியாது.கொலை, கொள்ளை, திருட்டு, வன்முறை, பாலியல் கொடுமை போன்ற வழக்குகளில் வெளியாகும் தீர்ப்பானது எவ்வகையாய் இருப்பினும் அவற்றில் நேரடியான பாதிப்பு அல்லது பலன் தனிநபர் அல்லது தனிக்குடும்பம் என்ற அளவிலானது. அதற்கு ஏற்கனவே உள்ள குற்றவியல் சட்டங்களைப் பற்றிய குறைந்தபட்ச தெளிவே போதுமானதாய் இருக்கக்கூடும். ஆனால் சமூகவியல் பிரச்னைகளை உள்ளடக்கமாகக் கொண்ட வழக்குகளில், நாட்டின் அரசியல் பொருளாதார பண்பாட்டுச் சூழலையும் இணைத்து பரிசீலிக்க வேண்டியுள்ளது. தீர்ப்பினால் பலனடையக் கூடியவர்கள் சமூகத்தின் எப்பிரிவினர் என்கிற பார்வை மிக அவசியமானதாய் இருக்கிறது. ஆனால் அதிகாரத்தின் வலிய தடுப்பரண்களால் வெகுமக்களின் வாழ்க்கையிலிருந்து அன்னியப்பட்டு, மேட்டிமை மனோபாவத்தோடு ஒதுங்கிக் கிடக்கிற நீதிபதிகளுக்கு சமூக அக்கறையுடன் கூடிய பார்வை கூடிவருவது எளிதல்ல. இந்தப் பின்னணியோடுதான் சுயநிதிக் கல்லூரிகள் குறித்த வழக்கை பரிசீலிக்க வேண்டியுள்ளது.சுயநிதி கல்லூரி முதலாளிகள் அந்தரத்திலிருந்து வந்தவர்களல்ல. தம்முடைய கைக்காசை கொட்டியாவது இந்த சமூகத்திற்கு கல்வி புகட்டியேத் தீர்வது என்கிற லட்சியவாதிகளுமல்ல. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஒரு நேர்காணலில் சொன்னதுபோல, கல்விச்சாலையை நடத்துவதைவிட சாணியுருண்டை விற்பதுதான் லாபம் என்ற சூழ்நிலை உருவாகுமானால் இவர்களெல்லாம் மாடுமேய்க்கும் தொழிலுக்குப் போய்விடக்கூடியவர்களே. இந்த சமூகத்தின் பல்வேறு வளங்களையும் பயன்படுத்தியே கல்லூரி தொடங்குவதற்கான மூலதனத்தை திரட்டியுள்ளனர். ஏற்கனவே அரசு உருவாக்கியிருக்கும் கட்டமைப்பை பயன்படுத்கின்றனர். அரசின் பல்வேறு கல்விச்சாலைகளில் உருவான அறிவாளிக் கூட்டத்தை தமது கூலியடிமைகளாகப் பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஊரிலும் இம்முதலாளிகளின் கல்விக்கொள்ளை தொடருவதில் ஏதேனும் பிரச்னைகள் எழுமானால் சட்டம் காவல் நீதி நிர்வாகம் என எல்லா முனைகளிலிருந்தும் அரசின் உதவியைப் பெறுகின்றனர். ஆகவே சமூகத்தின் பொதுவளங்களை, அரசின் உதவிகளை மிகுதியாக பயன்படுத்தி நடக்கும் ஒரு துறையில் அல்லது தொழிலில் அரசின் தலையீடும் அரசுக்கான பங்கும் தேவையாயிருக்கிறது. ஒருவேளை சுயநிதிக் கல்லூரி நடத்துவதை கொள்ளைத் தொழிலாக அறிவித்துவிடும் பட்சத்தில் அத்தகைய குற்றத்தில் பங்கு கேட்பது ஒரு அரசின் தார்மீக நெறிகளுக்கு புறம்பானது என்று வேண்டுமானால் ஒதுங்கிக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. கல்வியை ஒரு தொழிலாகவும் வியாபாரமாகவும் சீரழித்திருக்கும் சுயநிதி கல்லூரிகள் விசயத்தில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. வெளிநாட்டிலிருந்து படிக்க வருபவர்களுக்கு இடவொதுக்கீடு வேண்டும் என்று அக்கறை கொள்ளும் நீதிமன்றம் உள்நாட்டிலிருப்பவர்களுக்கு மறுப்பதற்கு என்ன நியாயத்தை கைக்கொண்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது மக்களிடையே. ஒருவேளை நியாயம் எதுவென்பதை நீதிமன்றம் அறிந்தேயிருந்தாலும் சட்ட நுணுக்கங்கள் அடிப்படையில் வேறுவழியின்றி கல்லூரி முதலாளிகளுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதோ என்றும் கூட அப்பாவித்தனமாய் நம்பியிருந்தனர். எனவேதான் இடஒதுக்கிட்டை உறுதிசெய்யும் வகையில் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று அரசை வலியுறுத்தும் நிலை உருவானது. ஆனால் அரசாங்கத்தின் அம்முயற்சியை உச்சநீதிமன்றம் எதிர்கொண்ட முறை தேசத்தை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமூகத்தின் பொதுவளங்களை பயன்படுத்தி இயங்கும் ஒரு நிறுவனம் சமூகத்திற்கான பங்களிப்பை முறையாக திருப்பிச் செலுத்தவேண்டும் என்ற இயற்கை நீதியின் அடிப்படையில் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு என்று வலுப்பெற்றுவரும் கோரிக்கைக்கு சுயநிதி கல்லூரிகளில் இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு பெரும் பின்னடவை உருவாக்கும். இடஒதுக்கீட்டுக்கு எதிரான உயர்சாதி மனோபாவம் ஒரு நாட்டின் உயரிய நீதி பரிபாலன அமைப்பிலிருந்தும் வெளிப்படுமானால் அது தனியார்த்துறையில் இடஒதுக்கீட்டை மறுப்பவர்களுக்கு வலுவூட்டுவதாக அமையும். இப்பிரச்னையில் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றிருப்பது நம்பிக்கையளிக்கிறது. நீதிபதிகளையும் கண்காணிக்கும் அமைப்பொன்றை உருவாக்கும் மத்திய அரசின் அறிவிப்பானது நீதித்துறையை ஜனநாயகப்படுத்துகிற- சமூகத்திற்கு கட்டுப்பட்ட ஒரு அமைப்பாக அதை நெறிப்படுத்தக் கூடிய முயற்சி என்ற அளவில் வரவேற்க வேண்டியுள்ளது.சட்டப்புத்தகங்களுக்குள் புதைந்திருக்கும் கண்களைப் பெயர்த்தெடுத்து சமூக நிலவரங்களை பார்ப்பதற்கும் அதில் நீடிக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் அநீதிகளையும் களைவதற்கு தனது சட்டஅறிவை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் சிந்திக்கிற மனவலிமை தமக்கு உண்டு என்பதை நிரூபித்த நீதிபதிகளை கடந்த காலத்தில் இந்நாடு கண்டிருக்கிறது. நீதித்துறையை சக்திமிக்க வகையில் சமரசமின்றி பயன்படுத்தி சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் ஒடுக்குண்ட மக்கள் கையூன்றி எழவும், நாகரீகச் சமுதாயமாய் நாடு பரிணமிப்பதைத் தடுக்கும் அதிகார அத்துமீறல்களை தடுக்கவும் தமது சட்ட மேதமையையும் அயராத உழப்பையும் நல்கிய கண்ணியம்மிக்க அந்நீதிபதிகளை நாடு பெருமிதத்தோடு நினைவுகொள்கிறது. விதிவிலக்குகள் எப்போதும் விதிவிலக்குகளே. விதிவிலக்குகள் பெரும்பான்மையாக மாறுவதற்கான முயற்சி என்பது எளிய மக்களுக்கு நீதியை கொண்டு செல்வதற்கான நெடிய அரசியல் போராட்டத்தினுடன் இணைந்தே இருக்கிறது.

தொலைந்து போய் விட்டது அந்த வசந்தகாலம் ...! ! ! ! !



காக்கி கலர் கால் சட்டையும் கட்டம் போட்ட லுங்கியும் ,, அந்த பொட்டல் புழுதியில் என்னோடு சேர்ந்து அழுக்காகும் ...... நான் கபடி விளையாடும் போது...!!!!!! கட்டை விரலை நிலத்தில் ஊன்றி... நடுவிரலின் வித்தையால் சேர்த்த கோலிக்குண்டுகள் ...!!!!! தண்ணீர் இல்லாத ஏரியில் நண்பர்களோடு விளையாடிய கிட்டிபுல்...!!!!! ஆடி மாத மாரியம்மன் கோவில் கூழ் குடிக்க சண்டை போட்டு நின்ற வரிசை...!!!௧ தாத்தா செய்து கொடுத்த பம்பரம், சரியில்லன்னு அழுது புரண்டு, அடி வாங்கி நாடார் கடையில், வாங்கிய சிகப்பு கலர் பம்பரம்....!!!!! ஐஸ் பெட்டிக்காரனிடம் பாட்டில் கொடுத்து வாங்கி சுவைத்த குச்சி ஐஸ்.! இமையமலையை பிரித்தது போல்..... என்னை விட்டு பிரிந்த சின்ன வயது வசந்தங்களை நினைக்கும் போது...!!!! உதட்டில் ஓரத்தில் உருக்கமான சின்ன புன்னகை....!!!! கண்களின் ஓரத்தில் சாந்தமான ஈரம்...!!!!