பிரபலமான இடுகைகள்

வியாழன், 5 மே, 2011

பொருளாதாரம்: சவால்களை நோக்கி...

இந்தியப் பொருளாதாரத்தை எதிர்நோக்கியுள்ள சவால்களை அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது. ஏறத்தாழ மந்தமான நிலையில் உள்ள வேளாண்துறை வளர்ச்சியும், வேளாண் உற்பத்தி விகிதமும் இந்தியப் பொருளாதாரத்தின் முதன்மையான சவால்களாகும். உணவு தானிய உற்பத்தி 210 மில்லியன் டன் அளவாகக் காணப்படினும், தனிநபர் வேளாண் உற்பத்தி ஆண்டுதோறும் குறைந்தவண்ணம் உள்ளது. 1991-ஆம் ஆண்டு 207 கிலோவாகக் காணப்பட்ட தனிநபர் வேளாண் உற்பத்தி தற்பொழுது 190 கிலோவாகக் குறைந்துள்ளது. நீர்ப்பாசன வசதியில் காணப்பட்ட விரைவான வளர்ச்சியே நீண்டகாலமாக வேளாண் துறையில் வளர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்பொழுது நீர்ப்பாசன வசதியினை பெருக்குவதற்கான பொது முதலீட்டில் ஏற்பட்ட திடீர் சரிவு வேளாண்துறை வளர்ச்சியினை பாதியாக்கியுள்ளது.
1992 - 97ஆம் காலகட்டத்தில் ஆண்டுக்கு 4.7% வளர்ச்சி கண்டுவந்த வேளாண்துறை ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் (1997 - 2002) 2% வளர்ச்சியாகக் குறைந்தது. ஆண்டுதோறும் அதிகரித்துவரும் கிராமப்புறத் தொழிலாளர்களை வேளாண்துறை தன்னகத்தே ஏற்றுக்கொள்ளும் என்ற நீண்டகால நம்பிக்கையினை, வேளாண்துறையின் சமீபகால மந்தமான வளர்ச்சி தகர்த்தெறிந்துள்ளது. இது ஊரகப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிப்பதுடன் கிராமப்புற வறுமையைக் குறைக்கும் முயற்சியிலும் முட்டுக்கட்டை போடும். அதிகரித்து வரும் வேளாண் உற்பத்திச் செலவு, புதிய பகுதிகளைச் சாகுபடியின் கீழ்க்கொண்டு வரும் முயற்சியினையும் தடுக்கின்றது. ஒவ்வோர் ஆண்டும் வேளாண்துறையினை நம்பிச் செயல்படுபவர்களின் எண்ணிக்கை 1.3 கோடியளவு உயர்ந்து வரும் இச்சூழலில் மந்தமான உற்பத்தி மற்றும் துறை வளர்ச்சி என்பது கிராமப்புறங்களின் வறுமையின் அளவைக் கணிசமாக உயர்த்தும்.
மொத்த மக்கள்தொகையில் 26% பேர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகக் குறிப்பிட்டாலும் ஊட்டச்சத்து அளவை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால் 70% மக்கள், பரிந்துரைக்கப்பட்ட அளவான 2400 கலோரி மற்றும் 2100-க்கும் குறைவான அளவே உணவு உட்கொள்கின்றனர். மேலும் நாட்டின் தொழிலாளர் எண்ணிக்கை ஆண்டுக்கு 75 லட்சம் அளவு உயர்கின்றது. இருப்பினும் அமைப்பு சார்ந்த துறையில் வேலைவாய்ப்பு வளர்ச்சி ஆண்டிற்கு 28 லட்சமாகவே காணப்படுவதால் பெரும்பாலான தொழிலாளர்கள் வருவாய் குறைவான, அமைப்புசாரா துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இவையன்றி, வேளாண் தொழிலாளர்கள் மற்றும் குறுவிவசாயிகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு 40 லட்சம் அளவு அதிகரிக்கின்றது. ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்பினை இவர்கள் அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டியது பொருளாதாரத்தின் முன் காணப்படும் மற்றுமோர் இமாலாயச் சவாலாகும்.
அதிக அளவு நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்பட்டு ஆண்டுக்கு 5% வளர்ச்சியினை அடைந்து வரும் தொழிற்துறையும், விரைவான தொழில்நுட்ப மாறுதல் மற்றும் சிர்திருத்த நடவடிக்கைகளினால் தேவையான அளவு வேலைவாய்ப்பினை உருவாக்குவதில் வெற்றி பெறவில்லை. உலகத் தரத்தினுக்கு இணையாக உற்பத்தி மற்றும் வளர்ச்சியினை அடைந்து வரும் உள்நாட்டு தனியார் துறையும் வேலைவாய்ப்பு வளர்ச்சியினை ஏற்படுத்தத் தவறிவிட்டது. மூலதனம் சார்ந்த தொழில்களின் பெருக்கம், தொழிலாளர் சார்ந்த தொழில்களின் பெருக்கத்தை விட அதிகமாகக் காணப்படுவதே இதற்குக் காரணம்.
உயர்ந்து வரும் கிராமப்புற வறுமையின் அளவு, சந்தைத் தேவையில் தேக்கநிலை போன்ற காரணங்களினால் வருகின்ற நாள்களில் தொழில் உற்பத்தியில் மிகப்பெரிய அளவு மாற்றங்களை எதிர்பார்க்க இயலாது. ஏனெனில், 2000 - 01 ஆம் ஆண்டு ரூ. 14,827 கோடி அளவுக்கு நிலையான சொத்துகளை வாங்கிய 200 பெரிய தொழில் நிறுவனங்கள் 2002 - 03 ஆம் ஆண்டு ரூ. 13,827 கோடி அளவே இதற்காகச் செலவழித்துள்ளன. புதிய மூலதனத்தை பெறும் நோக்கில் 1994 - 95-ல் ரூ. 26,000 கோடி அளவுக்குப் பங்குகளை வெளியிட்ட தனியார் நிறுவனங்கள் 2001 - 02-ல் ரூ. 6,000 கோடி அளவுக்கே பங்குகளை வெளியிட்டன.
பன்னாட்டுச் சந்தையில் காணப்படும் போட்டி மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளின் ஒருதலைப்பட்சமான வர்த்தகக் கொள்கை போன்ற காரணிகளினால் ஏற்றுமதிச் சந்தையினை உள்நாட்டு தொழில்மயமாக்கல் நடவடிக்கைக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் எளிதல்ல. மேலும், 1990களின் மத்தியில் 20 சதவீதமாகக் காணப்பட்ட ஏற்றுமதி வளர்ச்சி 90களின் இறுதியில் பாதியாகக் குறைந்து காணப்பட்டது. தொழில் வளர்ச்சிக்கான யுக்திகள், உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் உள்நாட்டுச் சந்தையினை அடிப்படையாகக் கொண்டதாக அமையும்பட்சத்திலேயே பெரிய அளவு சந்தையினை கொண்ட இந்தியா போன்ற நாடுகள் தங்களது மக்களின் வாங்கும் திறனை உயர்த்த இயலும். இதுபோன்ற கொள்கையினை இந்தியா கடந்தகாலத்தில் பின்பற்றாதது மிகப்பெரிய குறைபாடாகும்.
சர்வதேச அளவுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியில் வரியின் பங்களிப்பு 10%க்கும் குறைவாகவே காணப்படுகின்றது. பிற வளர்ச்சிடைந்து வரும் நாடுகளில் இதன் அளவு 15%மாகவும், குறிப்பாக முன்னேறிய நாடுகளில் இதன் அளவு 30%மாகவும் காணப்படுகின்றது. இந்தியா தற்போதைய வரிவிகிதத்தை அண்டை நாடான இலங்கையின் அளவிற்கு உயர்த்தும் பட்சத்தில் கூடுதலாக ரூ. 1 லட்சம் கோடி நிதி கிட்டும். இத்தொகையானது இந்தியாவின் ஒட்டுமொத்த நிதிப்பற்றாக்குறையினை போக்கவல்லது. நம்முடைய வரி விகிதத்தினை அண்டை நாடான பாகிஸ்தான் (13%) அளவிற்கு உயர்த்தும் பட்சத்தில் ஒட்டுமொத்த வருவாய்ப் பற்றாக்குறையினையும் போக்க முடியும். அதிக வருமானம் படைத்தவர்களுக்கான வரியளவு ஜப்பானில் 50%வும், சினாவில் 45%வும், இந்தியாவில் வெறும் 30%வும் காணப்படுகின்றது.
சமூகத் துறையில் குறிப்பாக கல்வி, மருத்துவம், சுகாதாரம், வீட்டு வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றின் வளர்ச்சிக்காக அரசு தன்னுடைய மொத்த செலவினத்தில் 7% அளவே முதலீடு செய்கின்றது. விரைவான, அதாவது ஆண்டுக்கு 8% பொருளாதார வளர்ச்சிக்கு இயைந்த நடவடிக்கையாக இதனைக் கருத முடியாது. ஏனெனில் அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களது மொத்தச் செலவில் கால்பங்கைக் கல்வி - சுகாதாரம் போன்ற சமூகக் கட்டமைப்பு வளர்ச்சிக்குச் செலவிடுகின்றன.
இத்தகு சவால்களை வென்றெடுத்து புதிய பாதையில், தொலைநோக்குச் சிந்தனையுடன் இந்தியப் பொருளாதாரம் தன்னுடைய பயணத்தைத் தொடங்க வேண்டுமெனில், அனைத்துப் பிரிவு மக்களுக்கும் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும். அத்துடன் ஊழல் மற்றும் திறமையின்மையினை வலுவான கரம் கொண்டு ஒடுக்கி, இருக்கின்ற வளங்களை முழுமையாகப் பயன்படுத்தவல்ல ஒரு நிர்வாக அமைப்பினை ஏற்படுத்துதல் மிகவும் அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக