பிரபலமான இடுகைகள்

புதன், 7 மார்ச், 2012

பொன்மணியா? நெல்மணியா?...





இந்தியத் திருநாட்டில் ஐரோப்பியர் வணிகம் செய்ய வந்து சிறிது சிறிதாக ஆட்சி அதிகாரமும் பெற்று வந்த காலத்தைப் பற்றி அறியக் கிடைத்திருக்கும் ஆவணங்களில் பிரஞ்சியர்களின் ஆட்சி நடைபெற்ற புதுச்சேரியாம் பாண்டிச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களின் நாட்குறிப்பு பல சமூக நிகழ்வுகளைச் சொல்லும் மிகச்சிறந்த ஆவணம். அந்த நாட்குறிப்பில் இருக்கும் குறிப்புகளைக் கொண்டு பிரபஞ்சன் என்ற எழுத்தாளர் பல அருமையான நாவல்களை எழுதியிருக்கிறார். நான் அவற்றில் இரண்டினைப் படித்திருக்கிறேன். ஒரு சிறந்த வணிகர், பெருந்தனக்காரர், நிலவுடைமையாளர் மட்டுமின்றி ஒரு சிறந்த தமிழார்வலர் என்றும் வள்ளல் என்றும் ஆனந்தரங்கம் பிள்ளை அவர்கள் அந்தக் காலத்தில் பாராட்டப்பட்டிருக்கிறார். அவர் வாழ்வில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு சுவையான நிகழ்ச்சி இது. பிள்ளை அவர்களின் வள்ளல் தன்மையைப் பற்றிக் கேள்விப்பட்ட மதுரகவிராயர் என்ற புலவர் பிள்ளை அவர்களைப் பார்த்து கவி பாடி பரிசில் பெற விரும்பி வந்தார். புலவர் வந்த நேரம் பிள்ளை வீட்டில் இல்லை. அவர் வயலுக்குப் போயிருப்பதாக வீட்டிலிருப்பவர்கள் சொன்னார்கள். மதுரகவிராயரும் விடவில்லை. வயலுக்குச் சென்றார். பிள்ளையவர்களின் வயல்வெளிகளின் வளத்தைக் கண்டு மகிழ்ந்தவாறே சென்றார். எங்கும் நெற்கதிர்களின் கனம் தாங்காமல் பயிர்கள் பூமியே தெரியாதபடி மூடியிருந்தன. ஓரிரு வயல்கள் அறுவடையாகியிருந்தன. அந்த அறுவடையான வயல்களில் ஒன்றில் கீழே சிதறிக் கிடந்த நெல்மணிகளை ஆனந்தரங்கம் பிள்ளை பொறுக்கிக் கொண்டிருந்தார். தற்செயலாக நிமிர்ந்த போது புலவரைப் பார்த்துவிட்டு, 'ஐயா. கொஞ்சம் வரப்பில் உட்காருங்கள். இதோ வந்துவிடுகிறேன்' என்று சொன்னார். சொல்லிவிட்டு மீண்டும் நெல்மணிகளைப் பொறுக்கத் தொடங்கினார். நேரம் சென்று கொண்டிருந்தது. புலவரின் பொறுமையும் கொஞ்சம் கொஞ்சமாக அவரை விட்டுச் சென்று கொண்டிருந்தது. தன் பொறுமை தீர்ந்துவிட்டதைப் பலவறாகக் குறிப்பால் உணர்த்தினார். அதனைக் கண்ட பிள்ளை 'ஏன் பறக்கிறீர்கள் புலவரே?' என்று கேட்டார். அது புலவரின் மனதைச் சுருக்கென்று தைத்தது. உடனே அவர

கொக்கு பறக்கும் புறா பறக்கும் குருவி பறக்கும்

குயில் பறக்கும் நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்

ஏன் பறப்பேன் நராதிபனே!

திக்குவிஜயம் செலுத்தி

உயர் செங்கோல் நடத்தும் செயதுங்கன் பக்கல் இருக்க

ஒரு நாளும் பறவேன் பறவேன் பறவேனே

என்று பாடல் படித்தார். பாடலின் சுவையையும் அதன் பொருளையும் கண்ட ஆனந்தரங்கம் பிள்ளை இனியும் புலவரைக் காக்கவைக்கக் கூடாதென்று வீட்டிற்குக் கிளம்பினார். புலவர் முன் செல்ல பிள்ளை பின் தொடர்ந்தார். வீட்டை அடைந்தவுடன் புலவரை கூடத்தில் அமரவைத்து பெரிய தலைவாழை இலை இட்டார். நடுப்பகல் நேரமாகிவிட்டிருந்ததால் பெரும்பசியுடன் இருந்த புலவரும் அறுசுவை உணவை எதிர்பார்த்து நிமிர்ந்து அமர்ந்தார். ஒரு வெள்ளி தட்டு நிறைய தங்க காசுகளைக் கொண்டு வந்து இலையில் இட்டு 'சாப்பிடுங்கள் கவிராயரே' என்றார் பிள்ளை. இலை நிறைய காசுகளை இட்டு சாப்பிடுங்கள் என்றால் எப்படி என்று விழித்தார் புலவர். 'என்ன விழிக்கிறீர்கள் கவிராயரே? தங்கக் காசுகளைச் சாப்பிடுங்கள். வயல்வெளியில் உதிர்ந்து கிடந்த நெல்லையெல்லாம் நான் பொறுக்குவதைப் பார்த்து நக்குப் பொறுக்கி என்று என்னை அற்பமாக நினைத்துப் பாடினீர்கள் அல்லவா? அந்த நெல் தானே பசிப்பிணிக்கு மருந்து. அது பசியைப் போக்குமா இல்லை இந்த தங்ககாசுகள் பசியைப் போக்குமா?' என்று சிரித்தபடியே கேட்டார். கவிராயரும் 'பெருமானே. பசியின் கொடுமை தாங்க இயலாமையால் அவ்வாறு அவசரப்படுத்தினேன்' என்று பதில் சொன்னார். பிள்ளையும் அந்த இலையுடன் தங்கக் காசுகளை அப்படியே முடிந்து புலவரிடம் கொடுத்துவிட்டு புலவரும் தாமுமாக அறுசுவை உணவு உண்டு புலவரை வழியனுப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக