பிரபலமான இடுகைகள்

வியாழன், 5 மே, 2011

ஆசையைப் பற்றிய தெளிவு

ஆசை... இது இல்லாதவர்கள் யார் என்று கேட்பார்கள். உண்மைதான்... ஆசைப்படுவது மனித இயல்புதான். அதில் தவறில்லை. ஆனால் ஆசையைப் பற்றி விரிவாகச் சிந்தித்தால் அதைப் பற்றிய தெளிவு நம்மை அதன் தீமைகளில் இருந்து காப்பாற்றும். ஆசைதான் துன்பத்திற்குக் காரணம் என்று கண்டறிந்தார் புத்தர். ஆசைக்கோர் அளவில்லை என்றார் தாயுமானவர். திருமூலர் இன்னும் ஒருபடி மேலே போய் ஈசனோடாயினும் ஆசை அறுமின்... என்கிறார்.
ஆசை என்பது சிறுவயது முதற்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் வளர்கிறது. மனிதன் வளர வளர விதம்விதமாய் ஆசைகள் வளர்கின்றன. சில ஆசைகள் இயற்கையானவை. சில ஆசைகள் ரசனை உணர்வால் தோன்றுபவை. சில ஆசைகள் தனிப்பட்டவை. அவற்றைப் பொதுமைப்படுத்த முடியாது. ஆசைகளால் அல்லல்படுபவர்கள் அதிகம். சில ஆசைகள் நிறைவேற, சில தியாகங்களைச் செய்ய வேண்டும்.
ஆசைகள் ஆரம்பத்தில் ஓர் எண்ணமாய்த் தோன்றும். அவற்றை ஆராயாமல் உணர்ச்சி வசப்படுவதன் காரணமாய்ப் படிப்படியாக மனத்தில் இடம்பிடித்துக் கொள்ளும். மனிதனை அடிமைப் படுத்தும்; ஏக்கத்தை வளர்க்கும்; அமைதியைக் கெடுக்கும்; தவறு செய்யக் கூடத் தூண்டும். ஆசையின் இயல்பு என்னவெனில் ஓர் ஆசை நிறைவேறியதும் இன்னோர் ஆசையைக் கொண்டு வந்து நிறுத்தும். நிற்பது என்பதும் முடிவு என்பதும் இல்லாதது ஆசை.
சில பேர் எதைப் பார்த்தாலும் அது தங்களிடம் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அழகான ஒன்றை ரசிக்கும்போது அந்தப் பொருளுக்கும் நமக்கும் இடையே நாகரிகமான தூரம் இருக்கிறது. ஆசை என்ற பெயரில் அதன் உரிமையாளனாய் இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது அந்தத் தூரத்தின் நாகரிகம் போய் விடுகிறது. தர்மத்துக்கு விரோதமான ஆசைகள் சில உண்டு. மனிதன் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது இதுபோன்ற ஆசைகளிடத்தில்தான். ஆசைகளுக்கு எல்லை வகுத்துக் கொள்ள வேண்டியது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் அவை தர்மத்தின் எல்லைக்குள்ளே இருக்க வேண்டும் என்பது. பல பேருக்குத் தேவைகளும் ஆசைகளும் என்ன என்பது புரிவதில்லை. தேவைகள் ஆசையாக மாறலாம்; ஆனால் ஆசைகள் தேவைகளாக மாறக் கூடாது. அப்போதுதான் ஆசைகளின் பாதிப்பு ஏற்படுகிறது. தேவைகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
மற்றவர்கள் ஒன்றை வைத்திருக்கிறார்களே என்று நினைத்து நாமும் அதேபோல் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுவது ஒருவிதமான தொற்று ஆசையாகும்.
சரி... ஆசைகளே இருக்கக் கூடாதா? ஆசைகள் விஷயத்தில் நம் கொள்கை எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்? ஆசைகளைத் தராசில் நிறுத்துப் பார்த்துத்தான் மனத்தில் அனுமதிக்க வேண்டும். மன அடக்கம் இதற்குத் தேவை. அவரவர்களின் நிலைக்கேற்ப - சூழ்நிலைக்குத் தக்கவாறு - தர்மத்தை மீறாத வகையில் - ஆசைகள் அமைய வேண்டும். ஆசைகள் அதிகரிக்கும் அளவுக்குப் பிரச்சினைகளும் அதிகரிக்கும்.
இன்னும் ஒரு முக்கியமான விஷயம்... நிறைவேறிய ஆசைகளில் மன நிறைவைக் கொள்ள வேண்டும். நிறைவேறாத ஆசையையே மனத்தில் நினைத்துக் கொண்டு வருந்தக் கூடாது. நிறைவேறிய வரையில் கிடைக்கும் மகிழ்ச்சிதான் உற்சாகம் தருகிறது. அந்த உற்சாகத்தை நிறைவேறாத ஆசையைப் பற்றிய நினைவால் கெடுத்துக் கொள்ளக் கூடாது. ஆசையைப் பற்றிய ஓர் உண்மை என்னவென்றால் அதுவும் மாறும் இயல்புடையது; அதன் மறுபக்கத்தில் துன்பம் உள்ளது. அது ஒரு விலங்கைப் போன்றது. அனுபவ முதிர்ச்சியினால்தான் ஆசையைப் பற்றிய தெளிவு பெருகும். ஆசைப்படும் பொருள் எல்லாம் நன்மையைச் செய்யும் - இன்பம் தரும் என்று சொல்ல முடியாது.
அதே சமயத்தில் சில ஆசைகள் பாராட்டைப் பெறுவதோடு மற்றவர்க்கு நன்மையும் செய்கின்றன. ரசனையால் ஏற்படும் ஆசைகள் என்று சில உள்ளன. ஒரு படைப்பாளி, கலைஞன், சிந்தனையாளன் - என்ற இவர்கள் எல்லாம் தங்கள் ரசனையால் சிலவற்றை உலகுக்கு அளிக்கிறார்கள். அவற்றினால் அவர்கள் நன்மையும் மகிழ்ச்சியும் அடைவதோடு, அந்தப் படைப்புகளை ரசிப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருகிறார்கள். இசை, கவிதை, ஓவியம், இலக்கியம், பிற படைப்புகள் எல்லாம் அந்தப் படைப்பாளிகள் ஆசையாய்த் தந்தவை. கல்வியிலும் அறிவிலும் ஆசை வைத்தால் அறிவாளிகள் உருவாகி சமூகத்துக்கும் நன்மை செய்கிறார்கள்.
ஆசைகளை மனிதன் எப்படிக் கையாள்கிறான் என்பதில்தான் அவன் புத்திசாலித்தனம் இருக்கிறது. தன்னல ஆசைகளை விடப் பொதுநல ஆசைகள் உயர்ந்தவை. ஆசைகள் அளவுக்கு மீறிப் போகும்போது - அல்லது வெறியாக மாறும்போது நம்மை ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கின்றன. எனவே மனத்தைச் சமநிலைக்குக் கொண்டு வருவது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக