பிரபலமான இடுகைகள்

வியாழன், 5 மே, 2011

மே தினம்



உலகம் கூடி ஒரு குரல் கூட்டிக் கொண்டாடுகின்ற திருநாள் மேநாள். இந்த உன்னத நாளைக் கொண்டாடி வரலாறு படைத்தவர் சிந்தனையாளர் சிங்காரவேலர். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில், ஏன் ஆசியக் கண்டத்திலேயே முதன்முதலாக இவ்விழாவைக் கொண்டாடி வரலாறு படைத்தவர் அவர். 1923-ல் மூவர்ணக் கொடியுடன் சுத்தி அரிவாள் சின்னம் இடம் பெற்ற கொடியையும் ஏற்றி அந்த நாளை அவர் கொண்டாடினார்.
பிரிட்டிஷ் அரசு அதனைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தது. அவர் மீது கான்பூர் சதி வழக்கையும் தொடுத்தது. சிங்காரவேலருடன் எம்.என். ராய், அபனி முகர்ஜி, முசாபர் அகமத், சௌகத் உஸ்மானி, நளினி குப்தா, குலாம் உசேன் ஆகியவர்களும் இவ்வழக்கில் இணைக்கப்பட்டனர். கொண்டாடக் கூடாத நாளாக அரசு கருதினாலும் ஒவ்வொரு ஆண்டும் சிங்காரவேலர் உயிரோடு இருந்தவரை இந்த நாளைக் கொண்டாடிக் கொண்டுதான் இருந்தார்.
முதுபெரும் காங்கிரஸ் தலைவர், முதல் தர விடுதலை வீரர், இடதுசாரிகளின் முன்னணித் தலைவர், தொழிற்சங்க மேதைகளின் முன்னோடி என்ற பெருமைகளுக்குரிய அவர், பெரியாருடன் இணைந்து பணியாற்றியதால் உருவானதே சுயமரியாதை சமதர்ம இயக்கம். 1933-ல் கொண்டாடிய மே நாள்தான் சிங்காரவேலரையும் பெரியாரையும் இரு துருவங்களாக்கியது.
ரௌலட் சட்ட எதிர்ப்பு, ஒத்துழையாமையில் பங்களிப்பு, சௌரி சௌரா எதிர்ப்பியக்கம், சட்டமன்ற மறியல், வேல்ஸ் இளவரசர் புறக்கணிப்பு, கிலாபத் இயக்கம், சைமன் குழு புறக்கணிப்பு போன்ற எண்ணற்ற அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபட்டவர் சிங்காரவேலர். டேக்கார்ட், ஸ்பினோசா இமானுவேல் காண்ட், ஹெகல், கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், ஹெர்பர்ட் ஸ்பென்சர், மெட்சினிகாப், சார்லஸ் டார்வின், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகிய அறிஞர்களின் கருத்துகளை முதன்முதலில் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய மேதை அவர்.
1925-ல் கான்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த மாநாட்டின் தலைவரே சிங்காரவேலர்தான். தமிழகத்தில் ஹிந்துஸ்தான் லேபர் கிசான் கட்சியை உருவாக்கினார். பல்வேறு இயக்கங்களோடும், அரசியலோடும் தொடர்புடைய இந்த அறிஞரைப் பெருமைப்படுத்த வேண்டுமென்றுதான் வட சென்னையின் மாவட்ட ஆட்சித் தலைவர் மாளிகைக்கு அந்நாளைய ஆட்சியாளர்கள் சிங்காரவேலர் மாளிகை என்ற பெயரைச் சூட்டியதுடன் அவரின் சிலையையும் அந்த மாளிகையின் உட்பகுதியில் வைத்துள்ளனர்.
சென்னையிலுள்ள நேப்பியர் பூங்கா எத்தனையோ அரசியல் நிகழ்ச்சிகளைக் கண்ட ஒன்று. அக்காலத்தில் அந்தப் பூங்கா மக்களின் கிளர்ச்சிக் கூடாரமாகவே விளங்கியதை அறிந்தவர்கள் அந்தப் பூங்காவின் பெயரை மாற்றி மேதினப் பூங்கா என்றே பெயர் மாற்றமும் செய்தனர். ஒவ்வொரு மே தினம் வருகின்ற பொழுதும் அனைத்துத் தொழிலாளர்களும் திரண்டு ஊர்வலமாக வந்து தங்களின் மரியாதையைச் செலுத்துகின்றனர்.
இந்த மேதின நாளில் நாம் அரசுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்க விரும்புகின்றோம். மே தினப் பூங்காவிற்குச் சென்று வணக்கம் செலுத்துகின்ற பொதுமக்கள் மே தினத்தை முதன்முதல் கொண்டாடி தண்டிக்கப்பட்ட மேதை சிங்காரவேலர் சிலைக்கும் மரியாதை செய்தால் எவ்வளவு பொருத்தமாக இருக்கும்?
ஆனால் சிங்காரவேலர் மாளிகையில் உள்ளே வைக்கப்பட்டுள்ள சிலை முழுவதும் தட்டிகளால் மறைக்கப்பட்டு, முயற்சியுடன் சென்று காண்பவருக்கே தெரியும் நிலையில் உள்ளது. அத்துடன் சிலைக்கு மாலை போடுவதற்குரிய மேடைகளோ, ஏணிகளோ எதுவும் அமைக்கப்படாமல் இதுநாள் வரை இருந்து வருகிறது.
ஆகவே அரசு முயன்று வடசென்னை சிங்காரவேலர் சிலை வளாகத்தில் நிரந்தர மேடை அமைக்குமானால் சென்னையைச் சேர்ந்த பொதுமக்கள், தொழிலாளர்கள், ஏன் அனைத்து மக்களும் மரியாதை செய்வதற்கு வசதியாக இருக்குமல்லவா? மே நாள் மட்டுமல்ல எந்த நல்ல நாளிலும் பொதுமக்கள் மரியாதை செய்ய முடியுமல்லவா? அடித்தட்டு மக்களுக்காக இயக்கம் கண்ட அந்த மேதையை அடித்தட்டு மக்களான தலித்துகள், தொழிலாளர்கள்
அத்தனைபேரும் வணங்க வாய்ப்பாக இருக்கும் என்பதே நமது கோரிக்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக