பிரபலமான இடுகைகள்

வியாழன், 5 மே, 2011

நாம் இழப்பதற்கு இருக்கிறது வேளாண்மை

இந்தியாவை ஆட்சி செய்யும் பேராயக் கட்சியின் தலைமையிலான நடுவண் அரசு, உலகை மென்று தின்று கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் முகவாண்மைதான் என்பது நாளுக்கு நாள் தெளிவடைந்து கொண்டு வருகிறது.
இந்திய வேளாண்மையைச் சிதைத்து நாசமாக்குவதிலும், இயற்கை வளங்களை அயலக நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதிலும், உலக வல்லரசுகளுக்கு இந்தியாவை விலைபேசுவதிலும், இந்தியத் தொழில்வளங்களைச் சீர்குலைத்து, பன்னாட்டுப் பொருட்களை இந்தியாவில் கொண்டு வந்து குவிப்பதிலும் பேராயக் கட்சியே (காங்கிரசுக் கட்சியே) முற்றுரிமை கொண்டதாய்த் திகழ்கிறது.
பிற ஓட்டுக் கட்சிகளெல்லாம் பேராயக் கும்பல் உதறுகின்றவற்றைப் பொறுக்கித் தின்னும் எடுபிடிக் கும்பல்களாகவே உள்ளன. இந்தத் தெளிவு கொண்ட நம்மைத் தினமணி ஆசிரிய உரை ஒன்று மண்டையில் தட்டியது.
தினமணியின் 27.2.2010 ஆசிரிய உரை, "சீச்சீ... சிறியர் செய்கை" என்று உளம்பதறி எழுதியுள்ள ஆசிரிய உரை, நூறுகோடி மக்களும் கவனித்துப் பார்க்க வேண்டியதாக உள்ளது.
இன்றைய சோனியா பேராயம் என்பது காந்தியக் கோட்பாடுகளின் நேர்பகை என்பதை விளக்கிக்கொள்ள வேண்டும். சோனியாவியம், மன்மோகனியம், பிரணாப் முகர்ச்சியியம், சிதம்பரவியம், எம்.கே.நாராயணனியம், சிவசங்கர மேனனியம் என்பன எல்லாம் சொந்த நாட்டைப் பிறர்க்கடிமை செய்தே துள்ளுவோம்! நாங்கள் மட்டும் பணம் அள்ளுவோம் எனும் ஒரே கோட்பாடுதான்!
இவர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய முகவர்கள்தாம் என்பதையும், இந்தியாவின் பன்முகப்பட்ட வேளாண் மரபுகளை ஒழித்துக்கட்ட இவர்கள் கச்சை கட்டி நிற்பவர்கள் என்பதையும் தினமணியின் ஆசிரிய உரை தெளிவாக எடுத்தியம்புகிறது.
நடுவண் அமைச்சரவை அமெரிக்காவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. "வேளாண்மைக் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஒப்பந்தம்" என்பது இதன் பெயர். இது அடுத்த மாதம் கையெழுத்தாக இருக்கிறது. இதன் நோக்கங்கள்:
1. வேளாண்மை விரிவாக்கத்தில் தனியார் வசத்தைப் புகுத்துவது.
2. இந்திய வேளாண்மையில் அமெரிக்கப் பன்னாட்டு வேளாண் நிறுவனங்களைப் பங்கு பெற அனுமதிப்பது.
இதன்படி, இந்திய வேளாண் நிலங்களை அமெரிக்காவின் பன்னாட்டு வேளாண் நிறுவனங்கள் மொத்தமாக வாங்கப் போகின்றன. இந்தியக் குடியானவர்கள் தம் கையகலத் துண்டு நிலங்களை அயலக நிறுவனங்களுக்கு வந்த விலைக்கு விற்கப் போகிறார்கள். விற்றுவிட்டு, அந்தப் பெருநிறுவனங்களில் வேளாண் கூலிகளாக மாறப் போகிறார்கள்.
இதன்பின், இங்கே என்ன நடக்கப் போகிறது?
இங்கே வேளாண்மையை ஆதாயம் மிக்க தொழிலாக ஆக்குவார்களாம். இதற்காக, எல்லா வகையான வேதியப் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் இந்திய நிலங்களில் கொட்டி மண்ணையும் நீரையும் பயிரையும் நஞ்சாக்குவார்கள். இந்த மண்ணுக்கு ஒவ்வாத மரஞ்செடி கொடிகளை இங்கே கொண்டுவந்து பயிர் செய்வார்கள்.
அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாகிவிட்ட பெரும்பண்ணை நிலங்களில் மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பயிரிடுவார்கள்.
மண்ணுக்கேற்ற மரபுவழிப் பயிர்கள் அனைத்தும் தாமாக அழிந்து போவதற்கான வேளாண் தொழில்நுட்பங்களை இங்கே கையாளுவார்கள்.
மரபணுமாற்ற விதை உருவாக்கும் மான்சாண்டோ போன்ற பெரு நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்ட "இந்திய - அமெரிக்க வேளாண்மை அறிவுசார் அமைப்பு" ஒன்று உருவாகப் போகிறது. ஐயாயிரம், பத்தாயிரம் ஆண்டுத் தொன்மை மிக்க வேளாண்மை அறிவு மரபை அழித்து ஒழிப்பதுதான் இதனுடைய நோக்கம்.
இந்த வஞ்சனை முயற்சிகளை இந்தியத் துணைக்கண்டத்தில் எவரேனும் எதிர்த்துக் கேள்வி கேட்டால்...?
அடுத்த பாராளுமன்றக் கூட்டத் தொடரிலேயே வர இருக்கிறது "உயிரித் தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டமம். இதன்படி,
மரபணுமாற்ற விதைகள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பற்றித் தவறாகக் கருத்துப் பரப்பினால், அரசின் முடிவுக்கு எதிராக மக்களைத் திசைதிருப்பினால், சட்டமுன்வரைவு 13(63) ஆவது பிரிவின்படி, எவரையும் 6 மாதம் முதல் ஓராண்டுவரை சிறையில் தள்ளலாம். 2 இலக்கம் ரூபாய் வரை அவருக்குத் தண்டத் தொகை விதிக்கலாம்.
அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறையினரின் பரிந்துரைப்படி, சட்ட முன்வரைவு 27(1) பிரிவின்படி, மரபணுமாற்றப் பொருள்களின் மீதான ஆராய்ச்சிகள் தொடர்பாக, தகவல் அறியும் உரிமை இதற்கு மறுக்கப்படுகிறது. மரபணு தொடர்பாக எந்த மாநிலத்தின் உரிமையையும் ஒதுக்கித் தள்ளலாம்.
இராசபட்சே இலங்கைத் தமிழரை வேரோடு அழித்தொழிக்க முயன்றதைப் போல, மன்மோகன் பிரணாப் முகர்ச்சி கும்பல் இந்தியத் துணைக் கண்டத்து வேளாண் மரபுகளை அடியோடு அழித்தொழிக்கத் துடிதுடித்துக் கொண்டுள்ளது.
யாரும் எதிர்த்துக் குரலெழுப்ப முடியாது!
மாநிலக் கட்சிகளெல்லாம் மன்னர் மோகனசிங்கரின் குரங்குப் படையாக மாறிப்போய்விட்டன.
இந்த நிலையில், இன்னும் கொஞ்சகாலத்தில், இந்த மண்ணுக்குரிய வேளாண்குடிகள் தம் நிலங்களை இழந்து போவார்கள். காலப் போக்கில் தம் மரபுவழி வேளாண் அறிவையும் மறந்து போவார்கள்!
உணவாகி, மருந்தாகி, மண்வளமும் நீர்வளமும் காக்கும் அரணாகி, மண்ணின் உரமாகி உயிர்த்திருந்த பயிர்களும் மரஞ்செடி கொடிகளும் அழிவுக்கு ஆட்படப்போகின்றன.
மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருள்களை உண்டு, சதைப் பிண்டங்களாய் வாழ்ந்து, சிந்திக்கும் மூளைத் திறனையும் நம் மக்கள் இழப்பார்கள். அறிவுள்ள மக்களைப் பெற்றெடுக்கும் ஆற்றலையும் இவர்கள் விரைவில் இழந்து போவார்கள்! மண்ணும் வளம் குன்றும்! பயிர்வகை உண்பன கேடுறும்! பின் ஊன் உண்ணிகள் ஊறுபடும்! இயற்கையும் சீர்கெடும்!
வேளாண் நிலங்களை வளைத்து, "சிறப்பு வேளாண் பொருளியல் மண்டலங்களை" உருவாக்கத் துணிந்துவிட்டார்கள். இனி, இந்தியாவுக்கென்று வேளாண்மையும் இருக்காது! இந்தியாவில் வேளாண் குடிகளும் இருக்கமாட்டார்கள்.
அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் அடியாள் கூடமாக இந்தியாவை மாற்றுவதுதான் மன்னர் மோகனசிங்கரின் புதிய சிறப்புப் பொருளியல் திட்டம்.
சரி, இடதுசாரிகளாலோ, பழமையாளர்களாலோ, புரட்சிக்காரர்களாலோ இந்தப் புதிய திட்டங்களுக்கு இடையூறு ஏற்பட்டால்?
உழவர்களுக்குக் கடன் கொடுத்துக் கழுத்தறுத்தல்,
கட்டுபடியாகாத விலையைத் தீர்மானித்தல்,
உழைப்புக்கு ஆளில்லாத் தொழிலாக வேளாண்மையை ஆக்குதல்,
மின்தட்டுப்பாட்டை ஏற்படுத்துதல்,
உரத்தட்டுப்பாட்டை ஏற்படுத்துதல்,
வேளாண்குடிகளுக்கு வேளாண்மையின்மீது வெறுப்பை ஏற்படுத்துதல் என்ற முறையில் வேளாண் தொழில் நாசமாக்கப்படும்.
இறக்குமதி தவிர உணவுக்கு வேறு வழியில்லை என்ற நிலையை சோனியா நிறுவனம் உருவாக்கும்.
அதன்பின்பு ஒத்துவராத இந்தியாவின்மீது அமெரிக்கா பொருளியல் தடையை விதிக்கும். அப்போது உணவு இறக்குமதியும் இல்லாமல் போகும். மக்கள் பசியால் துடிப்பார்கள்.
அப்போது, மோகனசிங்கர் அமெரிக்கப் பன்னாட்டு வேளாண் நிறுவனங்களை அழைத்து, மரபணு மாற்ற விதைகளின் கடைகளை விரிப்பார். இந்திய நிலங்களை, இந்தியக் கூலிகளைக் கொண்டு, அமெரிக்கப் பெருமுதலாளிகள் உழுது மரபணுமாற்ற உணவுகளைப் பயிர் செய்வார்கள். காந்தி வேண்டிய பொருளியல் தற்சார்பின் (சுதேசியத்தின்) நேர்பகைதான் சோனியா மோகனர் பேராயம்!
கோட்சே காந்தியை ஒரு தடவையே சுட்டான்! இன்றைய சோனியா மோகனக் கும்பல் நூறாயிரம் தடவை சுட்டுச் சல்லடையாக்கிவிட்டது காந்தியத்தை!
காந்தி ஊன்றி நடந்த தடியை மக்கள் ஏந்தி நடந்தால் எல்லாம் சரியாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக