பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

இளைஞர்களுக்காக!



1. இந்திய கல்விமுறை வேலைக்குத் தேவையான கல்வியை நமக்குத் தருகின்றதா?
2. +1 லிருந்து பி.காம் வரை 5 ஆண்டுகள் முழுக்க முழுக்க வங்கிப் பணிக்குத் தேவையான கணக்குப் பதிவியலைப் படித்த மாணவரும், வேறு ஏதாவது படித்துவிட்டு 6 மாதங்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து அல்லது பழைய கேள்வித் தாளைப் படித்துவிட்டுத் தேர்வெழுதும் மாணவரும் சமமா? போன்ற கேள்விகள் படித்த இளைஞர்களிடையே எழுகின்றன.
படிப்பு என்பது நமது அறிவை வளர்த்துப் கொள்வதற்குத்தான். "கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு" என்ற பழமொழி உண்டு. படித்த படிப்பிற்கும் அறிவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தன்னை மேம்படுத்திக் கொள்ளப் படிப்பறிவு உதவி செய்கின்றதே தவிர நாம் படிக்கும் படிப்பிற்கும் வேலைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.
நமது கல்வி முறையே மிகவும் வித்தியாசமானது. ஆங்கிலேயன் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதையே நாம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறோம்.
நமது வாழ்வியலை ஒட்டிய கல்வி நமது தமிழர் பண்பாடுகள், புரட்சிகள் சார்ந்த கல்வியை நாம் பயிலவில்லை என்பதும், செரிமானம் ஆகாத உணவை வெளியில் நாம் துப்புவது போல், இரவு முழுவதும் மனனம் செய்து அதனை அப்படியே துப்பித் தங்கப் பதக்கம் வாங்குவதும் நமது குறைபாடுகள். நான் இளைஞர் சமுதாயத்தைக் குறை சொல்வதாய் யாரும் வருத்தப்பட வேண்டாம். என்னுடைய வருத்தமே இன்றைய இளைஞர் சமுதாயம் உணர்வற்றுப் போய்க் கொண்டிருக்கின்றதே என்பதுதான். 20 சதவீதம் இளைஞர்கள் தவிர 80 சதவீதம் இளைஞர்கள் உணர்ச்சிகளற்று, வெந்ததைத் தின்று விதி வந்தால் மாள்வோம் என்றே எண்ணுகின்றனர். எந்தவித குறிக்கோளும் இன்றி +1 இல் எந்தத் துறை கிடைக்கின்றதோ அதை தலைவிதியே என்று படிக்கும் மாணவர்கள் கல்லூரி வாழ்விலாவது ஏதாவது குறிப்பிட்ட துறையைத் தேர்ந்தெடுத்து அதில் சிறப்புத் தகுதி பெற முயற்சி செய்யலாம். ஆனால் +1 இல் அறிவியலும், இளங்கலையில் தமிழ்த்துறை எடுக்கும் மாணவமணிகளை என்னவென்று சொல்லுவது அல்லது +1 இல் அறிவியலோ அல்லது கணக்கியலோ எடுத்தவர் கல்லூரியில் அதன் தொடர்பே இல்லாத துறை கிடைக்கின்றதே என்று படிக்கின்றனர். கல்லூரி வாழ்க்கை முடிந்தவுடன் White Colar Job-ஐ எதிர்பார்க்கின்றனர். தன் தகுதியைப் பற்றிக் கவலைப்படாது, மாதமானால் கையில் சம்பளக் கவர் கிடைக்கும் வேலையை எதிர்பார்க்கின்றனர்.
நம் கல்வித் துறையில் முறைகேடுகளும் குறைபாடுகளும் இருக்கலாம். ஆனால், குறிக்கோளற்ற மாணவர் சமுதாயம் இருக்கும் வரை ஒன்றும் மாற்றங்கள் வராது. விழிப்புணர்ச்சி இயல்பில் வரவேண்டும். கற்ற கல்வி எதுவாயினும் செய்யும் தொழிலே வாழ்க்கை என்று எண்ணும் எண்ணம் வளர வேண்டும்.
நிறைய இடங்களில் ஆட்கள் தேவை என்ற விளம்பர பலகையைதான் நாடு முழுவதும் பார்க்கிறோம். படித்த பட்டதாரி இளைஞர்கள் தாங்கள் படித்த அறிவைப் பயன்படுத்தி இந்த தமிழ்நாட்டை உயர்த்தலாம். எப்படி? சுயதொழில்தான். படித்த பட்டதாரி இளைஞர்கள், உடல் ஊனமுற்றோர் போன்றவர்களுக்குச் சுயதொழில் செய்ய அரசாங்கமே உதவி செய்கின்றது. நாம் முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் வருகின்ற வாய்ப்பைத் தவறாது பயன்படுத்தித் தன்னால் முடிந்தவரை மற்றவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்ற தன்னம்பிக்கையும் இன்றைய இளைஞர்களுக்குத் தேவை. தானும் சமுதாயத்தையும் முன்னேற்றும் இளைஞர் சமுதாயம் இருந்தால் தமிழகம் விரைவில் பொருளாதார ரீதியில் முன்னேற்றப்பாதையில் செல்லும். வரவேண்டியது விழிப்புணர்ச்சியும் தன்னம்பிக்கையும்தானே தவிர புலம்பல்கள் அல்ல.
சுயதொழிலை ஏன் இந்த இளைஞர் சமுதாயம் ஒதுக்கி வைத்துள்ளது என்றே புரியவில்லை. சுயதொழில் என்றால் வேலை செய்யவேண்டும். வேலை செய்தால்தான் வருமானம் வரும். வருமானம் வந்தால்தான் உணவு, உடை, தங்கும் வசதி போன்றவற்றை அனுபவிக்க முடியும். தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளோரையும் உயர்த்தும் சுயதொழிலை விடுத்து, வேலை இருந்தும் செய்யாத சோம்பேறிகளை உருவாக்கும் வேலையை, லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடும் அரசாங்கத் துறைகளைத் தேர்ந்தெடுப்பது ஏன்? படிக்கும் பொழுது ஆசிரியரை ஏமாற்றுவதும் வேலைக்குச் செல்லும்பொழுது அரசாங்கத்தை ஏமாற்றுவதும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இருந்தும் அதற்கு மேலே எதிர்பார்த்து போராட்டம், உண்ணாவிரதம் என்று பட்டியல் இடுவதும், என இளைஞர் சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது?
இளைஞர்களே திறந்த மனதுடன் நல்ல எண்ணங்களைப் பயிர் செய்யுங்கள். அயராத உழைப்பு சலிக்காத மனம் என்னும் மந்திரத்திற்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளுங்கள். உடல், "உழைப்பிற்கு". "படிப்பு" நமது அறிவுத் தாகத்திற்கு என்பதைப் புரிந்து செயல்பட்டால் இந்த உலகமே உங்கள் கைகளில்தான். நம்மைப்போல மற்றவர்களை மேம்படுத்த, உருவாக்க, வேலை வாய்ப்பை ஏற்படுத்த சுயதொழிலைத் தேர்ந்தெடுங்கள். நாடும் வளரும் நாமும் வளரலாம். இதன் மூலம் படிப்பிற்கும் வேலைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்ற எண்ணத்தைக் கவனத்தில் வைத்து உயருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக