பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

அன்னையின் மடியே ஆனந்தம்

இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கோடு ஐ.நா. சபை அறிவித்த மலைகளின் ஆண்டு - 2002 முடிந்துவிட்டது என்றாலும் அது தொடர்பான செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். இந்த அடிப்படையில்தான் இந்தியாவில் இப்போதிருக்கும் 19% காடுகளின் பரப்பை 10 - வது ஐந்தாண்டுத் திட்டத்தின் இறுதியில் (2007) 25%க்கும், 11-வது திட்டத்தின் இறுதிக்குள் (2012) 33%க்கும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரையில் இயற்கை மீது அதிக அளவில் தாக்குதல் இல்லை. ஆனால் அண்மைக் காலத்தில் இயற்கை வளங்கள் தொலைநோக்கில்லாமல் சுரண்டப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அதன் விளைவு... வெள்ளம், வறட்சி, வறுமை, நிலநடுக்கம், உடல் நலக்கேடு போன்ற பல்வேறு பிரச்சினைகள்.
இயற்கை அன்னை இலவசமாகத் தந்த இரு கொடைகள் நீரும், காற்றும். இன்று இரண்டுமே விலைபொருளாகி விட்டன. தொழிற்சாலைகளின் கழிவால், நதி நீர் நஞ்சாகிறது. நீர் வங்கிகளான குளங்கள் குப்பை மேடுகளாகின்றன. ஒரு லிட்டர் பாலின் விலையைக் காட்டிலும் ஒரு லிட்டர் மினரல் வாட்டர் விலை அதிகமாக உள்ளது. ஆலைப் புகையும், வாகனப் புகையும் காற்றை நோயின் தூதுவனாக்கிவிட்டன. பியூட்டி பார்லர்கள் போல் ஆக்சிஜன் பார்லர்கள் பெருநகரங்களில் முளைக்கின்றன. நல்ல காற்றைச் சுவாசிக்க மணிக்கு 50 ரூபாய்! உலகம் மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டிருந்தாலும் உபயோகிக்கத் தக்க நீர் 0.66% மட்டுமே. (கடல் நீராக 97.2%, உறைந்த பனிக்கட்டிகளாக 2.14% உள்ளது.) இந்த நீரும் நகர்ப்புறத்தின் வேகமான வளர்ச்சி, தொழிற்சாலைகளின் பெருக்கம் போன்ற காரணங்களால் மாசடைந்து வருகிறது. நாட்டிலேயே அதிக அளவில் மழை பெய்யக் கூடிய சிரபுஞ்சியில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. அன்று எந்த நதிக்கரைகள் நாகரிகத்தின் ஊற்றுக்கண்ணாய் இருந்தனவோ, இன்று அதே நதிக்கரை நகரங்கள் நதிகளை நாசப்படுத்தி வருகின்றன.
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலத்தில் இணக்கமாக இருந்த சுற்றுச்சூழல், வளர்ச்சி என்ற பெயரில் பொருளாதாரப் போட்டியில் களம் இறங்கிய பின்புதான் வெகுவாக பாதிப்புக்குள்ளானது. பொருளாதார வளர்ச்சி, வசதியான வாழ்க்கை நிலையை அளித்த போதிலும் மகிழ்ச்சியான வாழ்க்கை நிலை என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. சுற்றுச்சூழல் சிர்கேட்டில் வளரும் நாடுகளை விட, வளர்ச்சி அடைந்த நாடுகளின் பங்கே அதிகம். காரணம், வளரும் நாடுகள் வாழ்வைப் பற்றி கவலை கொண்டுள்ளன. மாறாக வளர்ச்சி அடைந்த நாடுகள் வசதியைப் பெருக்குவது பற்றிக் கவலை கொள்கின்றன. ஓர் அமெரிக்கக் குடும்பம் சராசரி இந்தியக் குடும்பத்தை விட 40 மடங்கு அதிகமாகச் சுற்றுச்சூழலைப் பாதிப்படையச் செய்கிறது. பூமித்தாயின் மடியில் தாவர இனம், விலங்கினம், மனித இனம் ஆகியவற்றிற்கிடையே சமச்சிர் நிலை உள்ளது. இவற்றில் ஒன்று குறைந்தாலோ அல்லது மிகுந்தாலோ இயற்கையின் சமநிலை சிர்குலைகிறது. வன விலங்குகளையும், பறவைகளையும் போற்றும் பழக்கமும், பண்பாடும் உள்ள நாடு பாரத நாடு. இவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டே இந்து மத வழிபாட்டில் பசு, பாம்பு, எலி, எருமை போன்ற விலங்குகளும், கிளி, பருந்து, கழுகு போன்ற பறவைகளும் தெய்வங்களின் வாகனங்களாகக் கருதப்பட்டுப் போற்றப்பட்டு வருகின்றன.
இயற்கைச் சூழ்நிலையில் பறவைகளையும் விலங்குகளையும் காண்பது உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் தர வல்லது. உல்லாசப் பயணிகளை ஈர்த்து அன்னியச் செலாவணியைப் பெற்றுத் தரக் கூடியது. மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள், வண்டுகள், ஊர்வன, பறப்பன அனைத்துமே மண்ணிற்கு மகுடம் சேர்த்து மனித வாழ்க்கைக்கு வளமும் பொலிவும் சேர்க்கின்றன. இந்த அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ளாமல் அழிவுப் பாதையை நோக்கி வீறு நடை போடுகிறோம் என்பது வேதனைக்குரியது.
மரங்கள் இயற்கை அளித்த ஏர்கண்டிஷனர்கள். நச்சுப்புகைகள், மாசுகள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தும் சாதனங்களாகவும் இவை உள்ளன. மண் அரிப்பைத் தடுத்து நிறுத்துவதுடன், மண் வளத்தை அதிகப்படுத்துவதும் மரங்களே. இதைக் கருத்தில் கொண்டே வன விழா வாரம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. வனம் என்பது லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளிப்பது. மரம் என்றால் நீர்; நீர் என்றால் உணவு; உணவு என்றால் வாழ்வு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மனித குலத்தின் துணையின்றி வனப்புடன் இயற்கை இருக்கும். ஆனால் இயற்கையின் துணையின்றி மனிதனால் ஒரு நிமிடம் கூட உயிர் வாழ முடியாது. இயற்கையை அண்டிப் பிழைக்கும் ஒரு சாதாரண படைப்புதான் மனிதன். நம் வாழ்க்கைத் தரம் உயரவும், எதிர்காலச் சந்ததியின் வாழ்க்கைத் தரத்தைக் காக்கவும் இயற்கையைக் காக்கும் வகையில் சில ஒழுக்க நெறிகளை மனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இயற்கை அனைத்து ஜீவராசிகளுக்குமாகத்தான் உண்டானதே தவிர மனிதத் தேவைக்காக மட்டுமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இயற்கை வளங்கள் எல்லையற்றவை அல்ல. எனவே அவற்றை வீணாக்கக் கூடாது.
இயற்கையைப் பற்றிய ஆர்வமே இல்லாத போக்கை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். புகைப்பது, குடிப்பது, புலால் உண்பது, இயற்கை வளங்களை ஊதாரித்தனமாக, முரண்பாடாகப் பயன்படுத்துதல் போன்ற தீய பழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும்.
அளவாக நுகர்வது, அதன் விளைவாகக் கழிவுப் பொருட்களைக் குறைத்து, அசுத்தத்தையும் குறைப்பதாகிய எளிய வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்.
இயற்கை வளங்களைப் பாதுகாத்தலுக்கு நான்கு சொற்களை நினைவில் நிறுத்த வேண்டும். ஒன்று - கழிவுகளைக் குறைத்தல்; இரண்டாவது - மீண்டும் பயன்படுத்துதல்; மூன்றாவது - மறுசுழற்சிக்கு உட்படுத்துதல், நான்காவது - வளங்களை மீட்டல் என்பதாகும். இதனைக் கடைப்பிடித்தால் இயற்கை நலம் பேணுதலும், மக்கள் நலம் காத்தலும் இயலும்.
வந்தே மாதரம் பாடலின் சு-லாம், சுஃபலாம், மலைய - சிதலாம் என்ற வரிகள் நிலவளம், நீர்வளம், காற்று வளம் ஆகிய இயற்கைச் சக்திகளைப் போற்றுகின்றன. அவற்றின் முக்கியத்துவத்தை உணராமல் மாசுபடுத்தியதால் மாபெரும் ஆபத்துகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. வெப்பம் 6 முதல் 10 டிகிரி வரை உயரும்; பருவ நிலை மாறும்; விளைச்சல் குறையும்; வறட்சியும் வறுமையும் பட்டினிச் சாவும் தினசரி நிகழ்வாகும்; பனி மலை உருகும்; வெள்ளம் கரை உடைக்கும்; கடலோர நகரங்கள் காணாமல் போகும்; தீவுகள் மூழ்கும் எனப் பிரளய எச்சரிக்கைகள் நீள்கின்றன. இவை மிகையான கற்பனைகள் அல்ல என்பதற்கான அறிகுறிகள் ஆங்காங்கே தோன்ற ஆரம்பித்துவிட்டன. நமது ஒரே வீடான இப்புவியை நாம் ஒவ்வொருவரும் காக்க உறுதி ஏற்கும் நேரம் வந்துவிட்டது.
வாழ்வதற்கான உரிமையை அரசியல் சட்டம் வழங்கியிருந்தாலும், இயற்கை வளமாக இருந்தால்தான் அது சாத்தியமாகும். மலர்களைச் சிதைக்காது தேனெடுக்கும் வண்டு போல் இயற்கையைச் சிதைக்காது அதன் வளத்தைப் பெற வேண்டும். இயற்கை ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் நிறைவேற்றுகிறது. ஆனால் பேராசைகளை அல்ல என்ற மகாத்மாவின் கருத்தை நினைவில் நிறுத்தி இயற்கை அன்னையைப் புரிந்து கொண்டு அவள் மடியில் ஆனந்தம் கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக