பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

வருங்கால சந்ததிக்குப் பாதுகாப்பு



உலகிலேயே ஏழாவது பெரிய நாடாக விளங்கும் நம் நாடு, உலக மக்கள் தொகையில் 17 சதவீதத்தையும், கால்நடைத் தொகையில் 18 சதவீதத்தையும் பெற்றுள்ளது. உயிர்ப்பன்மய கணக்கீட்டில் உலகின் 7 சதவீதத்தைப் பெற்றுள்ளது. 16 வகையான வனங்கள் நம் நாட்டில் உள்ளன. 45,000 வகையான தாவரங்கள் உள்ளன. நம் நாட்டில் உள்ள மக்கள்தொகைக்கும், மற்ற வளங்களுக்கும் தேவையான வனப்பரப்பு 33 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் தற்போது உள்ள வனப்பரப்பு 23 சதவீதமே. இந்திய அரசாங்கம் 2010-ம் ஆண்டில் 33 சதவீதத்தை அடைய வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொள்கிறது.
வனப்பகுதியில் உள்ள தாவர மற்றும் விலங்கு வகைகளால் மனிதனுக்குப் பல பயன்கள் உண்டு. தாவரங்கள் மூலம் மரப்பொருள்கள் மட்டும் கிடைப்பதில்லை. மூலிகைகளும் கிடைக்கின்றன. தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது வெளிவிடும் ஆக்சிஜன் வாயுவால் வளிமண்டலத்தில் அதனளவு உயர்கிறது. அதேவேளையில், கார்பன் - டை - ஆக்சைடு தாவரங்களால் உள்ளிழுக்கப்படுவதால் வளிமண்டல வெப்பநிலை உயர்வு தவிர்க்கப்படுகிறது. இதனால் துருவங்களில் பனிக்கட்டி உருகுவது குறைகிறது. வனங்களால் மழைப்பொழிவு அதிகம் கிடைக்கும்.
இவையில்லாமல், நுண்ணுயிர்கள் பலவும் வனத்தில் உள்ளன. கனிம வளங்கள் உள்ளன. மூங்கில் அதிக அளவில் வனங்களில் வளர்கின்றன. காடுகளில் மரங்கள் செழித்து வளர்வதால் மழைக்காலங்களில் மண் அரிப்புத் தடுக்கப்படுகிறது. ஏழை மக்களின் அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படும் எரிபொருளான விறகு வனத்திலிருந்துதான் பெரும்பாலான மக்களுக்குக் கிடைக்கிறது.
இவ்வாறு வளங்களைத் தரும் வனப்பரப்பு ஏன் குறைந்தது? அதற்கு யார் காரணம்? வனத்தில் உள்ள விலங்கினங்கள் நாள்தோறும் வேட்டையாடப்படுகின்றன. தொடர்ந்து மரம் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. காட்டுத் தீ எளிதில் தாக்கும் அபாயம் கொண்டதாக 50 சதவீதத்திற்கும் மேலாக பல காடுகள் உள்ளன. கனிமங்கள் பெறுவதற்காக சுரங்க நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. வனப்பகுதியில் அணைகள் கட்டுவதன் மூலம் தாவரங்கள் அழிகின்றன. தற்காலத்தில் வனப்பகுதியில் குடியிருப்புகள் கட்டுவதாலும், தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதாலும் வனவளங்கள் குறைந்து கொண்டே வருகின்றன.
மக்கள்தொகை வருடந்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மரக்கட்டைகளின் தேவையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதேவேளையில் மரக்கட்டைகளின் உற்பத்தி குறைந்துகொண்டே செல்வதால், தேவை - உற்பத்தி சமநிலையில் இல்லை. இதற்கு அடுத்து காற்று அரிப்பினாலும் வனச் செல்வங்கள் அழிந்து கொண்டே செல்கின்றன. ராஜஸ்தான், குஜராத், ஹரியாணா போன்ற மாநிலங்களில் காற்று அரிப்பினால் பலவித சேதங்கள் ஏற்படுகின்றன. வெள்ளம் திடீரென ஏற்படுவதால் மரங்கள், புதர்கள் முதலானவை பாதிப்பிற்குள்ளாகின்றன. அடுத்ததாக காடுகளில் ஏற்படும் தீயால் மரங்கள் அழிக்கப்படுவதுடன், வன உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது.
மத்திய மற்றும் மாநில அரசுகள், வனத்தின் பரப்பை உயர்த்த தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. எவ்வொரு திட்டமும் மக்கள் துணையுடனும், அரசு - சாரா நிறுவனங்களின் துணையுடனும் தான் வெற்றி பெறும்.
சமூகக் காடுகள் வளர்ப்புத்திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேசிய வனக் கொள்கையின் மூலமும் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு - சாரா நிறுவனங்கள் முழு அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும், கலப்பு வனக் காடுகளை ஏற்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. வனவிலங்குகளைப் பாதுகாக்க புலிகளுக்கான திட்டம் யானைகளுக்கான திட்டம் போன்று மற்ற சில விலங்குகளையும் பாதுகாக்கும் திட்டங்களை நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது 80 தேசியப் பூங்காக்களும், 442 சரணாலயங்களும், 13 உயிர்க்கோள வாழிடங்களும் வனப்பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ளன.
இவையன்றி சிப்கோ இயக்கம் போன்ற அரசு - சாரா நிறுவனங்கள் வனப் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. குஜராத் மாநிலத்தில் சமூகக் காடுகள் திட்டத்தின் ஒரு பகுதியாக மரப்புரட்சி வெற்றியடைந்ததைப் போல் மற்ற மாநிலங்களும் இத்திட்டத்தைச் செயல்படுத்த அரசு வலியுறுத்த வேண்டும்.
இன்றைய வனப்பாதுகாப்புத்தான் வருங்கால சந்ததியினருக்கு நாம் தரும் பாதுகாப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது செயலில் நிகழும் போதுதான், நாம் நமக்குத் தேவையான வனப் பரப்பு சதவீதத்தை எட்டிவிட்டோம் என்று பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக